Kranti Goud : ஒவ்வொரு மாபெரும் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு துயரமான கதை மறைந்திருக்கும். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 2025 ஐசிசி மகளிர் உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தபோது, அந்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கு துருப்புச்சீட்டாக இருந்த வீராங்கனை தான், மத்தியப் பிரதேசத்தின் ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்த வேகப்பந்து வீச்சாளர் கிரந்தி கவுட் (Kranti Goud). ஒன்பது வயதில் தொடங்கிய அவர் பயணம், கேலி, கிண்டல், வறுமை மற்றும் அவருடைய தாயின் தியாகம் ஆகியவற்றை கடந்தே இவ்வளவு பெரிய உயரத்தை எட்டியிருக்கிறது. கிரந்தி கெளர் கதை, ‘பெரிய கனவுகளைக் காண பெரிய நகரம் தேவையில்லை’ என்ற வாசகத்தின் உண்மையான வடிவத்தைக் கொடுத்துள்ளது.
Add Zee News as a Preferred Source
கிராமத்து கிரிக்கெட் சாம்பியன்
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் குவாரா. அங்கிருந்த புழுதி நிறைந்த மைதானமே கிராந்தியின் முதல் பயிற்சித் தளமாக இருந்தது. ஒன்பது வயதிலேயே சிறுவர்களுடன் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய கிராந்திக்கு, அன்று காலில் சரியான காலணிகூட இல்லை; ஆனால், அவரது கண்களில் ஒரு உலகக்கோப்பை கனவு இருந்தது. அவரைப் பார்த்தவர்கள் சிரித்தனர், “பெண்கள் போய் கிரிக்கெட் விளையாடுகிறார்களா?” என்று கேலி செய்தனர். ஆனால், இந்த அவமானங்கள் எதுவும் கிராந்தியின் கனலை அணைக்கவில்லை, மாறாக, அவரது வேகப்பந்து வீச்சுக்கு மேலும் உத்வேகம் அளித்தது. அந்த ஏளனச் சிரிப்பு, இன்று கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆரவாரமாக மாறி நிற்கிறது.
நகையை அடமானம் வைத்த தாய்
கிராந்தியின் குடும்பம் மிகக் கடுமையான வறுமையில் உழன்றது. அவரது தந்தை ஒரு ஓய்வுபெற்ற போலீஸ் கான்ஸ்டபிள். குடும்பத்தின் நிதி நெருக்கடி காரணமாக, கிராந்தியின் படிப்பு எட்டாம் வகுப்புடனேயே நின்றுபோனது. ஒருநாள், கிராந்தி தனக்கு ஒரு முழுமையான கிரிக்கெட் கிட் மற்றும் ஷூக்கள் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தபோது, அந்தக் குடும்பத்தின் வறுமை ஒரு தடையாக நின்றது. அப்போதுதான், கிராந்தியின் தாயார் மீனா கவுட் ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார். அவர், தங்கள் எதிர்கால நம்பிக்கைக்கான ஒற்றைச் சேமிப்பாக இருந்த தன் நகைகளைக் அடமானம் வைத்து கிடைத்த பணத்தில், மகளுக்கு கிரிக்கெட் கிட் வாங்கிக் கொடுத்தார்.
அது குறித்து கிரந்தி கவுட் தாய் மீனா கவுட் பேசும்போது “எல்லோரும் என் மகளை அடுப்பங்கரையில்தான் இருக்கச் சொன்னார்கள். ஆனால், என் கிராந்தி ஒருநாள் நிச்சயம் சாதிப்பாள் என்று எனக்குத் தெரியும்.” என்றார். இது வெறும் கிரிக்கெட் கிட் அல்ல; அது ஒரு தாயின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்தத் தியாகம்தான் கிராந்தியின் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது.
உலகக் கோப்பை வெற்றி
கிராந்தியின் திறமையைக் கண்டறிந்த பயிற்சியாளர் ராஜீவ் பில்த்ரே (Rajiv Bilthare), அவரது வாழ்க்கையில் ஒரு முக்கியமான நபராக மாறினார். கிராந்தியின் வித்தியாசமான பந்துவீச்சைக் கண்ட அவர், வறுமையில் வாடிய கிராந்திக்கு இலவசப் பயிற்சி, தங்குமிடம், உணவு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என அனைத்து உதவிகளையும் செய்தார். பயிற்சியாளரின் வழிகாட்டுதல், தாயின் ஆசி மற்றும் கிராந்தியின் கடின உழைப்பு ஆகியவை இணைந்து அவரை இன்று இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக மாற்றியுள்ளது.
2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றபோது, 22 வயதான கிராந்தி கவுட் தனது துல்லியமான வேகப்பந்து வீச்சால் பல முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவின் வெற்றியில் முக்கியப் பங்காற்றினார். இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற அந்த ஞாயிற்றுக்கிழமை, குவாரா கிராமம் ஒரு மினி மைதானமாகவே மாறிப் போனது. கிராமத்தின் மையத்தில் பெரிய திரை வைக்கப்பட்டு, முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் ஒன்றாக அமர்ந்து மேட்ச் பார்த்தனர்.
இந்தியா வெற்றி பெற்றதும், வானத்தில் பட்டாசுகள் வெடித்தன; மேள தாளங்கள் முழங்கின. “இது வெறும் வெற்றியல்ல, இது எங்கள் கிராமத்தின் வெற்றி! எங்கள் கிராந்தி, இந்தியாவிற்கே பெருமை சேர்த்தாள்!” என்று மக்கள் கோஷமிட்டனர். தீபாவளி பண்டிகை முடிந்து சில நாட்களே ஆனாலும், கிராந்தியின் வெற்றியால் குவாராவில் மீண்டும் ஒரு பெருமையின் தீபாவளி கொண்டாடப்பட்டது.
இன்று, கிராந்தி கவுட் வெறும் கிரிக்கெட் வீராங்கனை மட்டுமல்ல; அவர் துணிச்சல் மற்றும் நம்பிக்கையின் ஒரு சின்னமாக மாறிவிட்டார். அவரது பெயரில் உள்ளூர் பள்ளிகளில் பெண்களுக்கு கிரிக்கெட் பயிற்சி முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.
கிராந்தியின் கதை சொல்வது என்னவென்றால், அவரது ஏழ்மையையும், எட்டாம் வகுப்புக்குப் பிறகு நின்ற படிப்பையும், தாயின் தியாகத்தையும் தாண்டி—அவருக்கு இருந்த அடங்காத லட்சியமும் (Passion), அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் (Confidence) எப்படி உலகத்தையே வெல்ல வைத்தது என்பதை உரக்கச் சொல்கிறது.
மத்திய பிரதேச அரசின் பரிசு
கிராந்தி கவுடின் வரலாற்றுச் சாதனைக்குப் பிறகு, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் அவர்கள் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் வீராங்கனையான கிராந்தி கெளருக்கு, மத்தியப் பிரதேச அரசு சார்பில் ரூபாய் ஒரு கோடி (ரூ. 1 கோடி) ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
About the Author
S.Karthikeyan