சப்ரா: தேசிய ஜனநாயக கூட்டணி பிஹாரை அடமானம் வைக்க விரும்புவதாகவும், பாஜக எப்போதும் வேலைவாய்ப்புகள் குறித்து கவலைப்பட்டதில்லை என்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.
சப்ராவில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “தேசிய ஜனநாயகக் கூட்டணி பிஹாரை அடமானம் வைக்க விரும்புகிறது. தேஜஸ்வியின் வேலைவாய்ப்பு வாக்குறுதி, பெண்களுக்கு ரூ.2500 நிதியுதவி அளிப்பது குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள், இதனால் அவர்கள் பதற்றமாக உள்ளனர். இந்த முறை, பிஹார் மக்கள் நல்லிணக்கத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்.
வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம், கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று பாஜக கூறியது. பாஜகவினர் அமெரிக்காவால் பாதிக்கப்பட்ட மக்கள், அமெரிக்கா அவர்களை பயமுறுத்துகிறது, எனவே அவர்கள் இந்த வகையான வழிமுறைகளை நாடுவார்கள்.
வேலைவாய்ப்பு ஒருபோதும் பாஜகவின் நிகழ்ச்சி நிரலாக இருந்ததில்லை. பிஹாரிலிருந்து அதிகம் மக்கள் வேலைவாய்ப்புக்காக இடம்பெயர்வதற்கு காரணம் இதுதான். ஒவ்வொரு வீட்டிலும் அரசு வேலை ஏன் சாத்தியமில்லை? ரூ.14,000 கோடிக்கு நான் விரைவுச் சாலையை உருவாக்கியபோது, அதை செய்ய முடியாது என்று பாஜக கூறியது. நான் அதை செய்து காட்டினேன். இப்போது பிரதமர் வந்திறங்கியது அதே விரைவுச் சாலைதான். பாஜக அத்தகைய நெடுஞ்சாலையை உருவாக்கியிருக்கிறதா?
பலத்த பாதுகாப்புப் இருந்தபோதிலும் மொகாமாவில் ஓரு கொலைக் குற்றம் நடக்க முடியும் என்றால், மாநிலம் காட்டாட்சியின் கீழ் உள்ளதா அல்லது நல்லாட்சியின் கீழ் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உட்பட உயர்மட்டத் தலைவர்கள் பிரச்சாரம் செய்யும் பகுதிகளில் இதுபோன்ற குற்றங்கள் எவ்வாறு நிகழ முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்
243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கான வாக்குப் பதிவு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ஆம் தேதி நடக்கிறது.