Harmanpreet Kaur: ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி முதல் முறையாக வென்று மாபெரும் வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. அணியை வழிநடத்தி இந்த சாதனைக்கு வழிவகுத்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரை பலரை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், உலகக் கோப்பை வென்ற கொண்டாட்டம் கூட இன்னும் நிறைவடையவில்லை, அதற்குள் ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன் பதவில் இருந்து விலக வேண்டும் என்று குரல் எழுந்துள்ளது.
Add Zee News as a Preferred Source
ஹர்மன்பிரீத் பதவி விலக வேண்டும்
ஹர்மன்பிரீத் கவுர் பதவி விலக வேண்டும் என முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சாந்தா ரங்கசாமி தெரிவித்துள்ளார். அவர் முன்பே பதவி விலகி இருக்க வேண்டும் என்று அவர் கூறி உள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், ஹர்மன்பிரீத் கவுர் முன்பே பதவில் இருந்து விலகி இருந்திருக்க வேண்டும். அவர் ஒரு நல்ல வீராங்கனை. பணிச்சுமை இல்லை என்றால், அவர் இன்னும் சிறப்பக விளையாடுவார். பேட்டிங்கில் அவரால் முழுமையாக கவனம் செலுத்த முடியும்.
தற்போது உலகக் கோப்பையை வென்றுவிட்டார். இதன்பிறகு இதுபோன்ற ஒரு முடிவு எடுக்கப்படாது. ஆனால் அவர் இந்திய மகளிர் அணியின் நலனுக்காக இந்த முடிவை எடுக்க வேண்டும். கேப்டனாக இல்லாமலேயே அணிக்கு அவரால் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியும். தற்போது அவருக்கு 36 வயதாகிறது. இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கூட அவர் விளையாடலாம். ஆனால் அது கேப்டனாக தொடர்ந்தால் சாத்தியமற்றது.
புதிய கேப்டன்
ஹர்மன்பிரீத் கவுருக்கு பதிலாக ஸ்மிருதி மந்தானாவை கேப்டனாக நியமிக்க வேண்டும். அடுத்த உலகக் கோப்பைக்கு இப்போதில் இருந்தே நாம் தயார் ஆக வேண்டும். நாங்கள் விளையாடும்போது, பேட்டிங்கை காட்டிலும் பந்துவீச்சு சிறப்பாக இருக்கும். தற்போது பேட்டிங் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறது. எனினும் பந்துவீச்சும் ஃபில்டிங்கும் கொஞ்சம் முன்னேற வேண்டும். நாம் வெற்றி பெற்றதற்கு நமது பேட்டிங்தான் காரணம் என நான் நினைக்கிறேன்.
இந்த உலகக் கோப்பை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இன்னும் பலர் மகளிர் கிரிக்கெட்டை நோக்கி வருவார்கள். உலகக் கோப்பை அணியை தேர்வு செய்த தலைமை தேர்வு குழு உருப்பினர் நீத்து டேவிட்டுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு சாந்தா ரங்கசாமி தெரிவித்தார்.
About the Author
R Balaji