நகரி,
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமபிரம்மன். இவர் தனக்கு சொந்தமான ரூ.16 லட்சம் மதிப்புள்ள பழைய வீடு மற்றும் நிலத்தை விற்க முடிவு செய்தார். ஆனால் யாரும் வாங்க முன்வரவில்லை. எனவே அவர் தனது வீட்டை விற்க நூதன முறையை கையாண்டார். அதாவது லாட்டரி சீட்டு போல ரூ.500-க்கு பரிசு கூப்பனை அச்சிட்டு அதனை வினியோகித்தார். அவ்வாறு விற்பனையாகும் கூப்பன்களில் இருந்து ஒரு அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுத்து தனது வீட்டை விற்பனை செய்யவுள்ளதாக அவர் விளம்பர பலகை வைத்தார்.
இதனை பார்த்து ஏராளமானவர்கள் போட்டி போட்டுக்கொண்டு பரிசு கூப்பன்களை வாங்கினர். இதில் ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளி சங்கர் என்பவர் தனது பெயரிலும், தனது மனைவி, 10 மாத குழந்தை ஹன்சிகா, மகள் சாய்ரிஷிகா ஆகியோரின் பெயரிலும் என தலா ஒரு பரிசு கூப்பன் வீதம் 4 கூப்பன்களை வாங்கினார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுப்பதற்கான குலுக்கல் நடந்தது. அப்போது சங்கரின் 10 மாத குழந்தை ஹன்சிகா அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அவருக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு, நிலம் பரிசாக கிடைக்க உள்ளது. இதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.