புதுடெல்லி: பிஹாரில் பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பாஜக பெண் தொண்டர்களுக்கு பாஜக மூத்த தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. முன்னதாக, பிஹார் பாஜக பெண் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த தேர்தலில் நான் எங்கு சென்றாலும், எங்கு பேசினாலும் பாஜக தொண்டர்கள் அனைவரும் கடுமையாக உழைப்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு பொதுக் கூட்டமும் முந்தைய சாதனையை முறியடிக்கின்றன. நமது சகோதரிகளும் மகள்களும் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்கிறார்கள். பிஹாரின் பாஜக பெண் தொண்டர்கள் ‘எனது வாக்குச்சவடி மிகவும் வலிமையானது’ என்ற உறுதியுடன் செயல்படுகிறார்கள்.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றியை பெறப் போகிறது என்பதை இது உறுதிப்படுத்தியுள்ளது. இன்று பிஹாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி, ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என அனைவரின் இதயங்களிலும் ஆழமாகப் பதிந்துள்ளது. கடந்த 20 ஆண்டு கால தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிச் சாதனையை இந்த முறை முறியடிப்போம் என்று பிஹார் மக்கள் முடிவு செய்துள்ளனர்.
காட்டாட்சி ஆதரவாளர்கள் இதுவரை கண்டிராத மிகப் பெரிய தோல்வியைச் சந்திப்பார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியால் மட்டுமே பிஹாருக்கு வளர்ச்சியைக் கொண்டு வர முடியும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் மட்டுமே நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும். எனவேதான், பிஹாரில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் மீண்டும் ஒருமுறை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும் என்கிறார்கள். இதன்மூலம் மீண்டும் ஒருமுறை நல்லாட்சி அமைய இருக்கிறது.
பெண்களின் வாழ்க்கையை எளிதாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. பிஹாரில் மின்சார செலவுகள் குறைந்துள்ளன. நிதிஷ் குமார் அரசு தடையற்ற இலவச மின்சாரத்தை வழங்கியுள்ளார். இது மக்களுக்கு பெரிதும் பயனளிக்கிறது. பிஹாரின் பல நகரங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்க நாங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
காட்டாட்சி இருந்த காலங்களில் பெண்கள் வெளியே செல்வது கடினமாக இருந்தது. ஆனால், இப்போது அப்படி அல்ல. இரவில்கூட மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு பெண்கள் அச்சமின்றி செல்கிறார்கள், பணியாற்றுகிறார்கள். பிஹாரில் காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் ஒரு சுவர்போல நின்றுள்ளனர். காட்டாட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அதனால்தான், காட்டாட்சியை உருவாக்கியவர்கள் பெண்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.