புதுடெல்லி: டெல்லி போலீஸார் ரூ.13,000 கோடி மதிப்பிலான கொகைன் போதைப் பொருள் கைப்பற்றிய வழக்கில் தேடப்படும் குற்றவாளியை பிடிக்க இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
டெல்லி, பஞ்சாப், மும்பை, ஹைதராபாத் மற்றும் கோவா வில் போதைப் பொருட்கள் அதிகளவில் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் டெல்லியில் கடந்தாண்டு நடைபெற்ற வாகனச் சோதனையில் ஒரு கிலோ கொகைன்/மெபட்ரோன் கைப்பற்றப்பட்டது. இதில் பிடிபட்ட ஜதிந்தர் சிங் கில், போதைப் பொருள் கடத்தல் மன்னன் ரிசப் என்பவருடன் டெல்லி ஹட்கோ பேலஸ் ஒட்டலில் தங்கியிருந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. கைது நடவடிக்கையில் இருந்து அவர் தப்பிவிட்டார். தற்போது அவர் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இவர் தென் அமெரிக்காவில்இருந்து டெல்லிக்கு துபாய் வழியாக போதைப் பொருட்களை கடத்தி வந்துள்ளார். ரூ.13,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய ரிசப் பைசோவையை பிடிக்க இன்டர்போல் உதவி நாடப்பட்டது. இதையடுத்து அவருக்கு இன்டர்போல் ரெட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் அவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்.