‘பிஹார் தேர்தலுக்காக ஹரியானா கதை சொல்கிறார் ராகுல்’ – வாக்குத் திருட்டு புகாருக்கு பாஜக மறுப்பு

புதுடெல்லி: பிஹார் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஹரியானா விவகாரத்தை ராகுல் காந்தி எழுப்புவதாகவும், அவரது குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

ஹரியானாவில் வாக்குத் திருட்டு நடந்துள்ளதாகவும், அது நடக்காமல் இருந்திருந்தால் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கும் என்றும் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். அவரது குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது.

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜு, “தனது தோல்விகளை மறைக்க, ராகுல் காந்தி மீண்டும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறார். பிஹாரில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆனால், ராகுல் காந்தி இன்று ஹரியானாவின் கதையை சொல்லிக் கொண்டிருக்கிறார். பிஹாரில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. எனவே, கவனத்தை திசை திருப்ப ஹரியானா பிரச்சினை ஜோடிக்கப்படுகிறது.

ஹரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக ராகுல் காந்தி கூறுகிறார். 2004 தேர்தலின்போது கூட பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால், வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி தோற்றது. நாங்கள் முடிவுகளை ஏற்றுக்கொண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வாழ்த்தினோம். தேர்தல் ஆணையத்தை நாங்கள் குறைகூறவில்லை. ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்தால் அதை அவர் கொண்டாடுகிறார். எதிராக இருந்தால் ஊடகங்களை குற்றம் சாட்டுகிறார்.

ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்குக் காரணம் அதன் தலைவர்கள் தீவிரமாக களத்தில் செயல்படாததே. ஹரியானா தேர்தலின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் குமாரி செல்ஜாவே, காங்கிரஸ் இங்கு வெற்றி பெற முடியாது என கூறி இருந்தார். ஏனெனில், அக்கட்சித் தலைவர்களே கட்சியைத் தோற்டிக்க விரும்பினர். அதன்பிறகு, முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்துவிட்டு, கட்சித் தலைவர்கள் களத்தில் செயல்படாததே தோல்விக்குக் காரணம் என குற்றம் சாட்டி இருந்தார்.

மாநில காங்கிரஸ் தலைவர் ராவ் நரேந்திர சிங், காங்கிரஸ் கட்சியில் அடிமட்ட அளவில் ஒருங்கிணைப்பு இல்லை என கூறி இருந்தார். எனவே, காங்கிரஸ் எப்படி வெற்றி பெற முடியும்? ஹரியானா தேர்தல் தோல்விக்கு கட்சியின் தலைவர்களே காரணம் என அக்கட்சியின் தலைவர்களே கூறிய நிலையில், திருடப்பட்ட வாக்குகளே காரணம் என தற்போது ராகுல் காந்தி கூறுவதை யார் நம்புவார்கள்? மோசடி நடந்ததாகவோ, தேர்தல் விதிகள் மீறப்பட்டதாகவோ காங்கிரஸ் ஒரு வழக்கைக்கூட பதிவு செய்யவில்லை. இந்நிலையில், ராகுலின் பத்திரிகையாளர் சந்திப்பே ஒரு மோசடி செயல்” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.