சென்னை: தமிழக அரசின் விரிவான மினி பேருந்து திட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், 1,350 தனியார் பேருந்துகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் இந்த மேல் முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டுள்ளனர்.
பேருந்து வசதி இல்லாத சிறிய கிராமங்களுக்கும் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தும் வகையில் தமிழக அரசு புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தை கடந்தாண்டு அறிவித்தது. அதன்படி தனியார் மினி பேருந்துகள் 25 கிமீ தூரம் வரை செல்ல உரிமம் வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் புதிதாக 3,103 மினி பேருந்து வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு சுமார் 90 ஆயிரம் கிராமங்களில் வசிக்கும் 1 கோடி மக்கள் பயனடையும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தில் சில திருத்தங்கள் செய்து கடந்த ஏப்.28 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
இதை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் தனிநபர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, குக் கிராமங்களுக்கும் எளிதான போக்குவரத்து வசதி கிடைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் அரசு இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.
பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெறுவது மக்களின் அடிப்படை உரிமை. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஹேமந்த் சந்தன் கவுடர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘ஏற்கெனவே இந்த திட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக தெரிவித்தார். அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தடையுத்தரவு பிறப்பிக்க முடியாது. அதே நேரம், 1,350 தனியார் மினி பேருந்துகளுக்கு அரசு உரிமம் வழங்கியது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனக்கூறி விசாரணையை ஜன.3-வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.