சென்னை: விலக்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் வழங்கக் கோரி, விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தபோது, கிரானைட் முறைகேட்டை விசாரிக்க என்னை ஆணையராக உயர் நீதிமன்றம் நியமித்தது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் அரசுக்கு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்து க்கு அறிக்கை சமர்ப்பித்தேன்.
இந்த அறிக்கையின் அடிப்படையில், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் எனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு, 2023-ம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதால், கிரானைட் முறைகேடு வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள என்னால், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலவில்லை. அச்சுறுத்தல்கள் தொடர்வதால் பாதுகாப்பை தொடர்ந்து வழங்கக் கோரி அக்டோபர் 7-ம் தேதி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து மீண்டும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.