புதுடெல்லி: ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரில் நடத்தப்பட்ட சோதனையை அடுத்து பதற்றமடைந்த உமர் முகமது நபி, ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும், பதற்றத்தில் முன்கூட்டியே குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர் உமர் முகமது நபி. ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த 35 வயது மருத்துவரான இவர், அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணியாற்றி வந்துள்ளார். இதே மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வந்த அதீல் அகமது ராதர் என்பவரும் இவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். அதீல் அகமது ராதர், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புடனும் மற்றொரு உள்ளூர் மதவாத அமைப்புடனும் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
புல்வாமாவை சேர்ந்தவரும் உமர் முகமது நபியின் நெருங்கிய நண்பருமான மருத்துவர் முஜம்மில், டெல்லிக்கு அருகே ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த உமர் முகமது நபியும், இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாறியுள்ளார்.
உமர் முகமது நபி, மிகவும் அமைதியானவர் என்றும் படிப்பில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மருத்துவர்களான மூவரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் இணைந்து ‘ஒயிட் காலர் பயங்கரவாத நெட்ஒர்க்’-கை கட்டமைத்துள்ளனர். மேலும், இந்தியாவின் பல இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தும் நோக்கில் ஏராளமான வெடிபொருட்களை ஃபரிதாபாத்தில் பதுக்கி உள்ளனர். புலனாய்வுப் பிரிவினர் இதைக் கண்டுபிடித்து, கடந்த 9-ம் தேதி ஃபரிதாபாத்தில் சோதனை நடத்தினர். இதில், 2,900 கிலோ அம்மோனியம் நைட்ரேட், டெட்டனேட்டர்கள், டைமர்கள் மற்றும் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் இருந்த அதீல் அகமது ராதரும், ஃபரிதாபாத்தில் இருந்த முஜம்மிலும் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், போலீஸார் தன்னை கண்டுபிடித்துவிடுவார்கள் என அஞ்சிய உமர் உன் நபி, அவசரமாக செயல்பட்டுள்ளார். வெடிபொருட்களின் ஒரு பகுதியை வேறு இடத்துக்குக் கொண்டு செல்ல அவர் முயன்றுள்ளார்.
ஃபரிதாபாத் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பை அடுத்து, பாதுகாப்புப் படைகள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியதால், ஹூண்டாய் ஐ20 காரில் டெல்லிக்கு தப்பிச் சென்ற உமர் முகமது நபி, பீதி மற்றும் விரக்தியில் வெடிகுண்டை முன்கூட்டியே வெடிக்கச் செய்துள்ளார். உமர் நிகழ்த்திய கார் வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்கள், ஃபரிதாபாத்தில் கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்களுடன் ஒத்துப் போவதை போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
உமர் முகமது நபி பல நாட்களாகவே பீதியில் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் ஐந்து மொபைல் போன்களை பயன்படுத்தி வந்த நிலையில், அக்டோபர் 30-ம் தேதிக்குப் பிறகு அவை அனைத்தும் சுவிட்ஆஃப் செய்யப்பட்டுள்ளன. அதன் பிறகு அவர் மருத்துவமனை பணிக்கும் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.