சஞ்சு சாம்சன் மட்டும் இல்லை! இந்த 2 வீரர்களை டார்கெட் செய்யும் சிஎஸ்கே!

ஐபிஎல் 2026 சீசனுக்கான வீரர்கள் பரிமாற்ற பேச்சுவார்த்தைகள் அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்கள் அணியின் முக்கிய வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரணை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுத்து விட்டு, சஞ்சு சாம்சனை வாங்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த மெகா மாற்றத்தைத் தொடர்ந்து, சிஎஸ்கே அணி தங்களது பேட்டிங் வரிசையை, குறிப்பாக இடது கை பேட்ஸ்மேன்களை கொண்டு பலப்படுத்த முயற்சிக்கும் என இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

ஏன் இந்த மாற்றம்?

இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள அஸ்வின், “ஜடேஜா மற்றும் சாம் கரண் இருவரும் அணியில் இருந்து வெளியேறும்போது, அந்த இடங்களை நிரப்ப சிறந்த இடது கை பேட்ஸ்மேன்கள் சிஎஸ்கே-வுக்கு தேவைப்படுவார்கள். அந்த வகையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் விடுவிக்கப்பட வாய்ப்புள்ள வெங்கடேஷ் ஐயர் அல்லது ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறும் நிதிஷ் ராணா ஆகிய இருவரில் ஒருவர், சிஎஸ்கே-வின் முக்கிய இலக்காக இருப்பார்கள்,” என்று கூறியுள்ளார்.

சிஎஸ்கே-வின் பேட்டிங் வரிசை

அஸ்வினின் கணிப்புப்படி, சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரர்களாக களமிறங்கினால், அது சிஎஸ்கே-வுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பலமாக இருக்கும். அதை தொடர்ந்து, மூன்றாம் நிலையில் வெங்கடேஷ் ஐயர் அல்லது நிதிஷ் ராணா களமிறக்கப்படுவார்கள். பின்னர், அதிரடி வீரர்களான டிவால்ட் பிரேவிஸ், சிவம் துபே ஆகியோர் மிடில் ஆர்டரிலும், ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் 6-வது இடத்திலும் களமிறக்கப்பட்டால், சிஎஸ்கே-வின் பேட்டிங் வரிசை அசைக்க முடியாததாக மாறும் என அவர் ஒரு கனவு லெவனை உருவாக்கியுள்ளார்.

சேப்பாக்கத்திற்கு ஏற்ற வீரர்கள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் மெதுவான ஆடுகளத்தில், சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்ளும் வீரர்களே ஜொலிக்க முடியும். அந்த வகையில், வெங்கடேஷ் ஐயர் சேப்பாக்கத்தில் நல்ல ரெக்கார்டு வைத்திருப்பதும், அவரால் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை எளிதாக ஆட முடிவதும் அவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்.  அதே சமயம், உயரம் குறைவாக உள்ள நிதிஷ் ராணாவால், ஸ்கொயர் திசையில் பவுண்டரிகளை விளாசி, பவுன்ஸை நன்றாக பயன்படுத்த முடியும் என்பதால், அவரும் ஒரு சிறந்த தேர்வாக இருப்பார் என அஸ்வின் கருதுகிறார். 

கடந்த சீசனில் மோசமான ஃபார்மில் இருந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணா ஆகிய இருவரையும், அவர்களது தற்போதைய அணிகள் ஏலத்திற்கு விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடந்தால், இந்த இருவரில் ஒருவரை குறைந்த விலையில் தட்டி தூக்க, சிஎஸ்கே அணி தீவிரமாக முயற்சிக்கும் என்பது அஸ்வினின் உறுதியான கணிப்பாக உள்ளது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.