பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்கும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஷோயிப் மாலிக் சனா ஜாவேத் என்பவரைத் மணமுடித்தார். அப்போதுதான் சானியா மிர்சாவுக்கும் – ஷோயிப் மாலிக்குக்கும் விவாகரத்து ஆனது வெளியே தெரியவந்தது.
இந்த நிலையில், ‘சர்விங் இட் அப் வித் சானியா’ என்ற பாட்காஸ்டில் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஃபரா கானும், சானியா மிர்சாவும் கலந்துகொண்டு உரையாடினர்.

அப்போது, சானியா மிர்சா, “இன்று எல்லோரும் ஒரு போராட்டக் கதையை விரும்புகிறார்கள். போராட்டம் இல்லாதவர்கள் கூட மிகவும் வித்தியாசமான ஒரு போராட்டக்கதையை தங்களுக்காக உருவாக்கிக் கொள்கிறார்கள்.
இப்போது நான் நன்றாக இருக்கிறேன்… என் குழந்தைகளுக்கு ஒரு விஷயம் இல்லை என்றால் உங்கள் குழந்தைக்கு வேறு ஒரு விஷயம் இருக்காது. ஆகமொத்தம் எல்லோருக்கும் எல்லாமே கிடைத்துவிடுவதில்லை.
நிதிப் போராட்டம் என்பது மிகவும் வெளிப்படையான, மிகவும் கடினமான போராட்டம். ஏனென்றால் நீங்கள் விரும்புவதைத் செய்வதற்கான சுதந்திரம் நிதி இல்லை என்பதால் தடைபடும். அதே நேரம், அது அந்த நாளைக் கடந்து செல்வது அல்லது அந்த மாதத்தைக் கடந்து செல்வது பற்றியது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
கடந்த காலங்களில் விவாகரத்துப் பெற்றவர்களின் குழந்தைகள் பெரும் சிரமங்களைச் சந்தித்திருக்கின்றனர். அந்தக் காலங்களும் மிகவும் வித்தியாசமாக இருந்தன.
இப்போது குழந்தைகளின் வாழ்க்கையில் விவாகரத்து இயல்பாக்கப்பட்டிருக்கிறது. என் குழந்தை படிக்கும் பள்ளியில் இது மிகவும் இயல்பாக்கப்பட்டிருப்பதைக் காண்கிறேன்.

ஒரு வகுப்பில் பலக் குழந்தைகள் விவாகரத்து ஆன பெற்றோரிடமிருந்து வருகிறார்கள். அதே நேரம் நாம் இன்னொரு கோணத்திலிருந்து இதை அணுக வேண்டும்.
நீங்கள் இதை எவ்வளவு இயல்பாக்கினாலும், பெற்றோர் பிரிவால் நிச்சயம் குழந்தை பாதிக்கப்படும். அதில் மாற்றுகருத்து இல்லை. ஆனால், அந்தக் குழந்தைக்கு எது சிறந்ததோ அதைத் தேர்வு செய்து கொடுக்க வேண்டியது அவசியம்.
எனவே நீங்கள் புரிந்துகொண்டு உங்களுக்குத் தெரிந்ததை ஒரு சிறந்த சூழ்நிலையைத் தேர்வு செய்ய வேண்டும். ஒரு குழந்தை மகிழ்ச்சியற்ற இருவரைப் பார்க்கப் போகிறது என்றால், நாம் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்.” என்றார்.