அமெரிக்காவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். கவாய் சமீபத்தில் கூறிய கருத்துக்களுக்கு எதிராக நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதனை Stop Hindu Genocide என்ற அமைப்பு ஒருங்கிணைத்திருக்கிறது.

இந்த அமைப்பு கடந்த நவம்பர் 8ம் தேதி இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு நேரடியாக ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறது. அதில், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் மேற்பார்வையில் உள்ள கஜுராஹோ கோயிலில் இருப்பதாகக் கூறப்படும் வரலாற்று சிறப்புமிக்க விஷ்ணு சிலையை மீட்டெடுக்கக் கோரிய மனு மீது செப்டம்பர் 16 அன்று நடத்தப்பட்ட விசாரணையில் கவாய் கூறிய கருத்துகள் கடவுள் நம்பிக்கையை நிராகரிப்பதாக உள்ளது என அவருக்கு எதிராக குரலெழுப்பி வருகின்றனர்.
அந்த வழக்கில் நீதிபதி கவாய், “நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்கிறீர்கள். கடவுளிடமே ஏதாவது செய்ய சொல்லுங்கள். இது ஒரு தொல்பொருள் தளம், ASI அனுமதி வழங்க வேண்டும்….” எனக் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
Stop Hindu Genocide அமைப்பு தலைமை நீதிபதி கவாய் இந்துக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் எனக் கூறி நான்கு நாட்கள் இந்த போராட்டத்தை நடத்தியிருக்கிறது.
*Press Release – Chief justice Gavai was paraded naked in the middle of famous NYC Times Square along with famous Times Square massive billboard showing his head with a shoe thrown at him demanding to apologize to Hindus worldwide and resign.*
Hindus worldwide take serious… pic.twitter.com/ZYWAcafGuu
— Stop Hindu Genocide (@SPHinduGenocide) November 12, 2025
கவாய் மட்டுமல்லாமல் முன்னாட்களில் முன்னாள் தலைமை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் யு.யு.லலித், ஓய்வுபெற்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா, அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சூர்யா காந்த் உள்ளிட்ட பிற உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்களையும் எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கிறது இந்த அமைப்பு.
அவர்களின் கடிதத்தில் பண்டிகை நடைமுறைகள் மற்றும் கோயில் மேலாண்மை மீதான நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளை எதிர்த்துள்ளனர். “ஜனநாயகத்தின் தூணான இந்தியாவின் நீதித்துறை, அனைத்து குடிமக்களுக்கும் அவர்களின் பாரம்பரியத்தின் மீது மிகுந்த மரியாதையுடன் தொடர்ந்து சேவை செய்வதை உறுதி செய்வதே இதன் நோக்கம்” என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் பிற நகரங்களிலும் இதுபோன்ற விழிப்புணர்வு போராட்டங்களை நடத்த அவர்கள் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.