பலரது வெற்றிக்கு வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோரின் கட்சி பிஹாரில் படுதோல்வி!

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஓர் இடத்தைக் கூட வெல்லவில்லை. தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட போதிலும் பிரசாந்த் கிஷோரின் புதிய கட்சி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி (ஜேஎஸ்பி) பிஹார் தேர்தலில் பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இரண்டு தொகுதிகளில் முன்னிலை வகித்த ஜன் சுராஜ், அதன் பின்னர் பூஜ்ஜிய நிலைக்கு சென்றுவிட்டது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு ஜேஎஸ்பி 234 வேட்பாளர்களை நிறுத்தியது. இருப்பினும் பிரசாந்த் கிஷோர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான மகா கூட்டணிக்கு புரட்சிகரமான மூன்றாவது மாற்று ஜன் சுராஜ்தான் என்று சொல்லி பிரச்சாரம் செய்தார் பிரசாந்த் கிஷோர்.

பிரசாந்த் கிஷோரின் ஆக்ரோஷமான பத்திரிகையாளர் சந்திப்புகள் தொடர்ந்து சலசலப்புகளை உருவாக்கி வந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர்கள் மீதான அவரின் குற்றச்சாட்டுகளும் ஒரு பேசுபொருளாக இருந்தன. என்டிஏ மற்றும் மகா கூட்டணிக்கு போட்டியாக கிட்டத்திட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திய போதிலும், ஜன் சுராஜ் இந்த தேர்தலில் பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை.

பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ஜன் சுராஜ் கட்சி ஒரு சில இடங்களில் வெல்லக்கூடும் என தெரிவித்திருந்தன. ஆனால், தேர்தல் முடிவுகளின்படி ஜேஎஸ்பி பெரும்பாலான தொகுதிகளில் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளன. 10 முதல் 20 தொகுதிகளில் மட்டுமே இக்கட்சி 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளன என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக கிட்டத்திட்ட போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்துள்ளது ஜேஎஸ்பி.

ஜன் சுராஜ் கட்சி வெற்றி பெறாவிட்டாலும், மகா கூட்டணிக்கு சில தொகுதிகளில் பெரும் சவாலை கொடுத்துள்ளது. ஆட்சிக்கு எதிரான வாக்குகளை தன் பக்கம் இழுத்து மகா கூட்டணியின் வெற்றியை பல தொகுதிகளில் தடுத்துள்ளது ஜன் சுராஜ். பிரதமர், முதல்வர் என பலரின் வெற்றிக்கு வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோரின் வியூகம், அவரின் சொந்த சொந்த கட்சிக்கே வேலை செய்யவில்லை என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.