காசா சிட்டி,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டது. 2 ஆண்டுகள் நடந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 68 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் முயற்சியால் கடந்த அக்டோபர் 10-ந்தேதி இஸ்ரேல் , ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஹமாஸ் தங்கள் வசம் உயிருடன் இருந்த 20 பணய கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது. மேலும், கொல்லப்பட்ட பணய கைதிகளில் சிலரின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது. இன்னும் 3 இஸ்ரேலிய பணய கைதிகளின் உடல்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவிடம் உள்ளன.
இதனை தொடர்ந்து ஒப்பந்தப்படி இஸ்ரேல் தங்கள் பிடியில் உள்ள பாலஸ்தீனிய சிறைக்கைதிகள் (ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட) பலரையும் விடுதலை செய்து வருகிறது. மேலும், உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இஸ்ரேலிய சிறைகளில் உயிரிழந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 15 பாலஸ்தீனிய கைதிகளின் உடல்களை இஸ்ரேல் இன்று ஒப்படைத்துள்ளது. காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவால் நிர்வகிக்கப்பட்டு வரும் சுகாதாரத்துறையிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக இதுவரை 330 பாலஸ்தீனியர்களின் உடல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 95 உடல்கள் மட்டுமே முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மரபணு பரிசோதனைக்கான கருவிகள் இல்லாததால், இஸ்ரேல் ஒப்படைத்த உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.