பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. மெகா கூட்டணிக்கு 35 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பிஹாரில் 243 தொகுதிகள் உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிட்டன. இதில் பாஜக 89 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் 85, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 19, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 4, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5 தொகுதிகளில் வெற்றி பெற்றன. அறுதிப் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை என்ற நிலையில் தே.ஜ.கூட்டணி 202 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. கடந்த தேர்தலைவிட ஆளும் கூட்டணிக்கு கூடுதலாக 77 இடங்கள் கிடைத்துள்ளன.
மெகா கூட்டணிக்கு பெரும் பின்னடைவு: மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட் – எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4, ஐஐபி 3 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின. இதில், ராஷ்டிரிய ஜனதா தளம் 25, காங்கிரஸ்
6, இந்திய கம்யூனிஸ்ட் – எம்எல் 2, மார்க்சிஸ்ட் 1, ஐஐபி 1 தொகுதியில் வெற்றி பெற்றன. மெகா கூட்டணிக்கு 35 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது மெகா கூட்டணி 75 இடங்களை இழந்துள்ளது.
64 தொகுதிகளில் தனித்துப்போட்டியிட்ட ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ்கட்சி ஒரு இடத்தில்
வென்றது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஆம் ஆத்மிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.

துணை முதல்வர்கள்: சாம்ராட் சவுத்ரி (தாராபூர்), விஜய்குமார் சின்ஹா (லக்கிசாராய்) வெற்றி பெற்றனர். ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் (ராகோபூர்)14,532 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். பிஹார் முதல்வராக 10-வது முறையாக நிதிஷ் மீண்டும் பதவியேற்க உள்ளார். பிரதமர் மோடி தனது சமூக வலைதளப்பதிவில், ‘‘நல்லாட்சி, வளர்ச்சி, சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை சாத்தியமாக்கிய நிதிஷ் குமார், சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மாஞ்சி, உபேந்திர குஷ்வாகாவுக்கு பாராட்டுகள்’ என்று தெரிவித்துள்ளார்.