சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக சென்னையில் 31,373 பேர் பயன்பெறும் வகையிலான இந்த திட்டம் டிசம்பர் 6-ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் 3 ஷிப்ட்களில் பணியாற்றும் 31,373 தூய்மைப்பணியாளர்கள் பயன்பெறும் வகையில், முதல்வரின் உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அந்த வகையில், 1,000 பேருக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணை, குடும்பத்தினர் சுயமாக தொழில் தொடங்க 25 பேருக்கு மானியத்துடன் கடனுதவி, புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் 1,260 மாணவர்களுக்கு கல்வி, விடுதிஉள்ளிட்ட அனைத்து விதமான கட்டணங்களுக்காக ரூ.2.82 கோடிக்கான உதவிகள், தாட்கோ நிறுவன சிறப்பு திட்டங்களின்கீழ், 1,000 பேருக்கு ரூ.35 லட்சம் உதவித் தொகை, பணியின்போது உயிரிழந்த 2 பேரின் வாரிசுகளுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி ஆகியவற்றையும் முதல்வர் வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது: சென்னை மாநகரத்தை தூய்மையாகப் பாதுகாக்கும் உங்களைப் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை. இந்த சமூகநீதிப் பயணத்தில் உங்கள் சுயமரியாதையைக் காத்து, உங்கள் பசியைப் போக்கத்தான், முதல்வரின் உணவுத் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.
டிபன்பாக்ஸில் சுடச்சுட உணவு: இதன்படி, தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்களது பணிக்கு இடையில் உணவு வேளையில் சுவை, ஆரோக்கியம் நிறைந்த உணவு வழங்கப்படும். தூய்மையாக சமைத்து, டிபன்பாக்ஸில் வைத்து, வெப்பக் காப்பு பையில் எடுத்துச் சென்று, பணியாற்றும் இடத்தின் அருகில் உள்ளாட்சி அமைப்புக்குச் சொந்தமான கட்டிடத்தில் அவர்களுக்கு உணவு பரிமாறப்படும். முதல்வரின் உணவுத் திட்டம் டிசம்பர் 6-ம் தேதி முதல் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 2006-11-ல் கருணாநிதி ஆட்சியில் தூய்மைப் பணியாளர் நல வாரியம் அமைக்கப்பட்டது. தாட்கோ மூலம் தூய்மைப் பணியாளர் வாரிசுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தொழில் முனைவோராக மாற்ற வழிசெய்யப்பட்டது. மூன்று சக்கர மிதிவண்டி வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. உங்களது மற்ற கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
இரவு பகல் பாராமல் உழைக்கும் உங்களுக்கு தனியாக ஓய்வறை இல்லை என்று கூறினர். சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும், தூய்மைப் பணியாளர்களுக்காக பிரத்யேகமாக, 300 சதுர அடியில் உடை மாற்றும் அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் ஓய்வறைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
மக்களுக்கு சுய ஒழுக்கம் அவசியம்: ‘இந்தியாவிலேயே சென்னைதான் தூய்மையான நகரம், தமிழகம்தான் தூய்மையான மாநிலம்’ என்று, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கூறவேண்டும். அதற்கு நீங்கள்தான் துணைநிற்க வேண்டும். இந்த நிலையை அடைய, பொது இடங்களில் தூய்மையைப் பேணும் சுய ஒழுக்கம், மக்களுக்கு வரவேண்டும். மற்ற பணிகளைப் போலவே, தூய்மைப் பணியாளர்களின் கண்ணியம், முறையான பணிச்சூழல் உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை திட்டங்களாக உருவாக்க வேண்டும். சுய ஒழுக்கமின்றி முழு வளர்ச்சியோ, சமூக மேன்மையோ அடைவதற்கு சாத்தியமே இல்லை. அரசு தனதுகடமையை சிறப்பாக செய்யும். மக்களும் பொறுப்பாக இருந்து, பொது இடங்களையும், நமது மனங்களையும் தூய்மையாக வைத்திருப்போம். தன்னலம் கருதாத தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் போற்றுவோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மதிவேந்தன், சென்னை மேயர்பிரியா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், வீட்டுவசதித் துறை செயலர் காகர்லா உஷா, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தா.கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.