புதுடெல்லி: பிஹார் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஆளும் என்டிஏ கூட்டணி 202 இடங்களை பெற்றுள்ளது. அதேசமயம் ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணி 35 ஆக சுருங்கி விட்டது. ஆர்ஜேடி 25 இடங்களை மட்டுமே பெற்றது.
இதில் முக்கிய ஆதரவாளர்களான யாதவ் மற்றும் முஸ்லிம்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் முக்கிய நடவடிக்கையான எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) முதல் மாநிலமாக பிஹாரில் அமலானது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிஹாரில் வாக்காளர் அதிகார யாத்திரை நடத்தினார். இதன் உச்சமாக மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார். இவை எதுவுமே மெகா கூட்டணிக்கு பலன் அளிக்கவில்லை.
இதன் பின்னணியில் சில முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. இதில் ஒன்றாக மெகா கூட்டணியில் தொடக்கம் முதலாகவே நம்பிக்கையின்மை நிலவியது. தனது தந்தை லாலுவுக்கு பிறகு மெகா கூட்டணிக்கு தேஜஸ்வி தலைமை தாங்க விரும்பினார். இவருக்கு பின் இருக்கையில் அமர காங்கிரஸ் விரும்பவில்லை. யாத்திரையில் கலந்துகொண்ட அனைத்து கட்சிகளும் தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்ட போதிலும் ராகுல் மட்டும் மவுனம் காத்தார்.
இதனிடையே இடதுசாரிகளும், விகாஸ் இன்சான் கட்சி (விஐபி) தலைவர் முகேஷ் சாஹ்னியும் வெளிப்படையாக அதிக தொகுதிகள் கோரினர். இப்பிரச்சினையை பேசித் தீர்க்க பெரிய எதிர்பார்ப்புடன் டெல்லி சென்ற தேஜஸ்விக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இவரை சந்திப்பதை ராகுல் தவிர்த்து விட்டதாக தகவல் வெளியானது. இறுதியில் வேறுவழியின்றி கட்டாயத்தின் பேரில் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிக்கப்பட்டார். இதுவும் மெகா கூட்டணியின் ஒரு முக்கியப் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் விஐபி கட்சித் தலைவர் முகேஷ் சாஹ்னியை துணை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததும் பெரிய தவறாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இந்த அறிவிப்பு ஆளும் என்டிஏவால் ஏற்கெனவே தீவிரமாக முன்னிறுத்தப்பட்டு வந்த மகா தலித் சமூகத்தை அந்நியப்படுத்தியது. மேலும், மெகா கூட்டணி ஆட்சி அமைந்தால் மற்றொரு துணை முதல்வர் உண்டு என்றவர்கள் அவரது பெயரை அறிவிக்கவில்லை. இது பிஹாரில் சுமார் 20 சதவீதம் உள்ள முஸ்லிம்களை கோபப்படுத்தியது. இதுவும் முஸ்லிம் பகுதியில் மெகா கூட்டணியின் பலவீனமான பிரச்சாரமும் இழப்பை ஏற்படுத்தி விட்டது. வழக்கமாக முஸ்லிம்களின் வாக்குகளை பிரிக்கும் ஒவைசி இந்த முறை மெகா கூட்டணியில் இணைய விரும்பினார். ஆனால், மெகா கூட்டணி அவரை புறக்கணித்தது. இதன் விளைவும் தேர்தல் முடிவுகளில் வெளிப்படையாகத் தெரிகிறது.பாஜக போட்டியிட்ட 101 தொகுதிகளில் 12-ல் தோல்வி அடைந்தது. இந்த 12-ல் 5 தொகுதிகளை ஏஐஎம்ஐஎம் கட்சியிடம் பாஜக இழந்துள்ளது.
பிஹாரின் முக்கியத் எதிர்கட்சித் தலைவரான தேஜஸ்வியுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மேடை ஏறினாலும் அது ஏனோ பெரிதாகச் சிறக்கவில்லை. ககரியா பிரச்சாரத்தின்போது ராகுல், அத்தொகுதி மீனவர்களுடன் தண்ணீரில் குதித்து மீன் பிடித்ததற்கும் உரிய வாக்குகள் கிடைக்காதது போலானது. கடந்த 2004 முதல் 20 ஆண்டுகளாக ராகுல் அரசியலில் உள்ளார். அவரது இந்த அனுபவத்திற்கு 55 வயதில் இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான சாகசங்கள் தேவையில்லை என இப்போது விமர்சிக்கப்படுகிறது.
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியாலும் ராகுலுக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது. பிரியங்கா காந்தியின் பிரச்சாரமும் எடுபடவில்லை. 20 வருடங்களாக தொடரும் என்டிஏ ஆட்சிக்கு எதிரான வாக்குகள் தமக்கு நிச்சயம் வெற்றித் தரும் என்ற மெகா கூட்டணியின் கணிப்பு தவறாகப் போனது. இப்போது பிஹாரின் வெற்றியால் தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கும் பாஜக சவால் விடுகிறது.