மதுரை: எஸ்ஐஆர் மீது தேர்தல் ஆணையம் தான் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார்
மதுரையில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விமானம் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வந்தார் விமான நிலையத்தில் அவர் செய்தியாளரிடம் கூறுகையில், “இன்று மூன்றாம் கட்ட சுற்றுப்பயணம் மதுரையிலிருந்து ஆரம்பித்து.. டிசம்பர் 2-ம் தேதி ஈரோட்டில் நிறைவு பெறுகிறது.
தமிழகத்துக்கு வர வேண்டிய முதலீடு ஆந்திராவுக்கு சென்றதை நான் கவலையுடன் தான் பார்க்கிறேன். இது போன்ற திட்டங்கள் எல்லாம் இங்கு வரவேண்டும். அப்போதுதான் நிறைய இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற முடியும். இதற்கு உரியவர்கள் பதில் சொல்ல வேண்டும். வருங்காலத்தில் பெரிய திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்பது தான் தேமுதிகவின் நிலைப்பாடு..
தேர்தலில் பல ஆண்டுகளாக முறைகேடு நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம்தான் உறுதியாக நிலைப்பாடை எடுத்து. ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். தவெக எஸ்ஐஆர்க்கு எதிராக போராடுமா என்பது பற்றி நான் இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை. மேலும், 2026-ல் யாருடன் கூட்டணி என்பது குறித்து கடலூர் மாநாட்டில் முடிவெடுக்கப்படும்.
தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு கொடுப்பதால் மட்டுமே அவர்களது தேவை பூர்த்தி ஆகாது. அவர்களது தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்.” என்றார்.