RCB அணியை வாங்கும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ்! KGF, காந்தாரா படங்களை தயாரித்த நிறுவனம்

RCB: இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக ஒரு மிகப் பெரிய நிர்வாக மாற்றத்தைக் காண இருக்கிறது. அணியை வைத்திருக்கும் டியாகோ இந்தியா (Diageo India) நிறுவனம், ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக அணியை விற்க முடிவு செய்துள்ளது. இதனால், உலகின் பல்வேறு நிறுவனங்கள் இந்த அணியை வாங்க பேச்சுவார்த்தை நடத்திய  நிலையில், மிகப்பெரிய பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், இப்போது ஆர்சிபி-ஐ வாங்க முன்னணியில் உள்ளது. 

Add Zee News as a Preferred Source

கன்னடத் திரையுலகின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனம். ‘கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’ மற்றும் ‘சலார்’ போன்ற பான்-இந்தியா பிளாக்பஸ்டர் திரைப்படங்களைத் தயாரித்த நிறுவனம் தான் இது. இப்போது, RCB அணியின் புதிய உரிமையாளராக உள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த நிறுவனம் என்பதால், அந்த நிறுவனம் ஆர்சிபி -ஐ வாங்கும்போது அந்த மாநில மக்களுக்கு இன்னும் கூடுதல் நெருக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹோம்பாலே ஃபிலிம்ஸ், 2023 ஆம் ஆண்டு முதல் RCB-யின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பார்ட்னராகச் செயல்பட்டு வருகிறது. அணிக்குக் கிரியேட்டிவ் விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்களை (Engagement Campaigns) உருவாக்குவதில் ஏற்கனவே ஹோம்பாலேவுக்குப் பங்கு உண்டு. இப்போது ஆர்சிபி விற்பனைக்கு வருகிறது என தெரிந்தவுடன் இம்முறை, வெறுமனே ஒரு பார்ட்னராக இல்லாமல், அணியின் இணை உரிமையாளராகப் (Co-Owner) பொறுப்பேற்க முடிவெடுத்துவிட்டது. இதன் மூலம் தாங்கள் தயாரிக்கும் சினிமாக்களையும் பிரம்மாண்டமாக பிரபலப்படுத்த முடியும் என அந்த நிறுவனம் கணக்குப் போட்டுள்ளது.

ஹோம்பாலே ஃபிலிம்ஸ்: யார் இவர்கள்?

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. விஜய் கிரகந்தூர் மற்றும் சலுவே கவுடா ஆகியோரால் 2012-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், குறுகிய காலத்திலேயே பான்-இந்தியா வெற்றிகளைக் குவித்து, இந்தியத் திரைப்படத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘கே.ஜி.எஃப்’, ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’, பிரபாஸின் ‘சலார்’ போன்ற படங்கள் மூலம், கன்னடத் திரையுலகை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றதில் ஹோம்பாலே ஃபிலிம்ஸுக்கு முக்கியப் பங்கு உண்டு.

RCB-யை டியாகோ ஏன் விற்கிறது?

RCB அணியின் தற்போதைய உரிமையாளர் டியாகோ இந்தியா. இதன் தாய் நிறுவனம் டியாகோ. மதுபானத் தயாரிப்பு மற்றும் விற்பனைதான் (Alcobev Business) டியாகோவின் மைய வணிகமாக உள்ளது. விளையாட்டுச் சொத்துகள் (Sports Assets) அதன் மைய வணிகத்தின் கீழ் வராததால், அந்தப் பிரிவில் இருந்து விலக நிறுவனம் விரும்புகிறது. RCB அணி 2025-இல் முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதன் மூலம், அதன் பிராண்ட் மதிப்பு உச்சத்தில் உள்ளது. இந்தச் சாதகமான நேரத்தில் விற்கும்போது, மிக அதிக விலையைப் பெற முடியும் என அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த விற்பனை செயல்முறை மார்ச் 31, 2026 க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்சிபி-யை வாங்கக் காத்திருக்கும் பிற நிறுவனங்கள்

உலகின் மிகப் பிரபலமான ஐபிஎல் அணிகளில் ஒன்றான RCB-ஐ வாங்க ஹோம்பாலே ஃபிலிம்ஸ் மட்டுமன்றி, வேறு சில பெரிய நிறுவனங்களும் ஆர்வத்துடன் போட்டியிடுகின்றன. ஜிரோதா இணை நிறுவனர் நிகில் காமத், அதானி குழுமம் Adani Group, ஜெ.எஸ்.டபிள்யூ குழுமம் JSW Group, சீரம் இன்ஸ்டிடியூட் அதார் பூனாவாலா ஆகியோர் இந்தப் போட்டியில் உள்ளனர்.

ஐபிஎல் 2026க்கான அணிக் கட்டமைப்பு

ஐபிஎல் 2025-ன் நடப்புச் சாம்பியனான RCB, வரவிருக்கும் மினி ஏலத்திற்கு முன்னதாக வீரர்களைத் தக்கவைக்கும் பட்டியலை வெளியிட்டுள்ளது. அணியின் மைய வீரர்களில் பெரும்பாலானவர்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ள RCB, லியாம் லிவிங்ஸ்டோன், லுங்கி இங்கிடி போன்ற சில வீரர்களை விடுவித்துள்ளது. இருப்பினும், புதிய உரிமையாளர்கள் அணியின் எதிர்கால உத்திகளை வரையறுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

About the Author


Karthikeyan Sekar

I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.