சீனாவில் பட்டதாரி ஒருவர், தனது அதிக சம்பளம் கொண்ட வேலையை இழந்ததால், மனைவி அவரை விவாகரத்து செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவின் ஹாங்சோ நகரைச் சேர்ந்த 43 வயதான கியான்கியான், ஜெஜியாங் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். இவர் ஒரு அரசு நிறுவனத்தில் மாதம் 50,000 யுவான் (சுமார் ரூ. 5.8 லட்சம்) சம்பளத்தில் உயர் பதவியில் பணியாற்றி வந்தார்.

ஆன்லைன் விளையாட்டின் மூலம் சந்தித்த ஒரு பெண்ணை, திருமணம் செய்துகொண்டுள்ளார்.திருமணத்திற்குப் பிறகு, அவரின் மனைவி எந்த வேலைக்கும் செல்லாமல், கியான்கியானின் வருமானத்தில் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்.
தனது அழகைப் பராமரிக்க விலை உயர்ந்த அழகுசாதனப் பொருட்களை வாங்குவது, அழகு சார்ந்த சிகிச்சைகள் செய்துகொள்வது என அவரின் மனைவி அதிகமாக செலவு செய்து வந்துள்ளார்.
ஒருகட்டத்தில், மனைவியின் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், தனது வீட்டையும் விற்க வேண்டிய நிலைக்கு கியான்கியான் தள்ளப்பட்டிருக்கிறார்.

கியான்கியான் திடீரென தனது வேலையை இழந்திருக்கிறார். இதனால் அவரின் வருமானம் கடுமையாக குறைந்திருக்கிறது.. மாதம் 10,000 யுவானுக்கும் (சுமார் ரூ. 1.24 லட்சம்) குறைவாக சம்பாதிக்கும் நிலைக்கு அவருக்கு ஏற்பட்டுள்ளது.
வருமானம் குறைந்ததால், அவரின் மனைவி உடனடியாக விவாகரத்து கோரியிருக்கிறார். அப்போதுதான், தன் மனைவி தன்னை விரும்பவில்லை, தனது பணத்தை மட்டுமே விரும்பினார் என்பதை கியான்கியான் உணர்ந்துகொண்டார்.
தற்போது, கியான்கியான் உணவு டெலிவரி செய்யும் நபராக பணியாற்றி வருகிறார். “தற்போது தனிமையில் இருந்தாலும், சுதந்திரமாக உணர்கிறேன்” என்று அவர் கூறியிருக்கிறார். முந்தைய வாழ்க்கையை விட இப்போது வாழ்க்கை எளிமையாக இருந்தாலும் நிம்மதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.