புதுடெல்லி: கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட போதிலும், பிரதமர் மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி சசி தரூர், பிரதமர் நரேந்திர மோடியை பல்வேறு தருணங்களில் புகழ்ந்து பேசி வருகிறார். இந்நிலையில், இன்று அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அந்த நிகழ்ச்சியில், ஆக்கபூர்வமான பொறுமையின்மை என்ற தலைப்பில் பிரதமர் மோடி பேசினார். மேலும், காலனித்துவத்துக்குப் பிந்தைய மனநிலையை அவர் வலுவாக குறிப்பிட்டார். இந்தியா இனி வெறும் வளர்ந்து வரும் சந்தை அல்ல, மாறாக உலகிற்கு வளர்ந்து வரும் மாதிரி என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதார மீட்சி குறித்தும் பிரதமர் பேசினார். தான் எப்போதும் தேர்தல் மனநிலையில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதாகவும், ஆனால், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உண்மையில் தான் உணர்ச்சிகரமான நிலையில் இருப்பதாகவும் பிரதமர் கூறினார். பிரதமர் உரையின் குறிப்பிடத்தக்கப் பகுதி மெக்காலேயின் 200 ஆண்டுகால அடிமை மனநிலையை முறியடிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது. இந்தியாவின் பாரம்பரியம், மொழிகள், அறிவு அமைப்புகளின் பெருமையை மீட்டெடுக்க 10 ஆண்டுகளை நாடு அர்ப்பணிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இந்திய தேசியவாதத்துக்காக குரல் எழுப்ப ராம்நாத் கோயங்கா ஆங்கிலத்தை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதையும் அவர் தெரிவித்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மொத்தத்தில் பிரதமரின் உரை, பொருளாதாரக் கண்ணோட்டமாகவும், கலாச்சார நடவடிக்கைகளுக்கான அழைப்பாகவும் இருந்தது. முன்னேற்றத்துக்காக தேசம் அமைதியற்றதாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கடுமையான சளி மற்றும் இருமலுடன் போராடிய போதிலும் பார்வையாளர்களில் இருந்ததில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.