பாட்னா: பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடைபெறும். பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும். இதையடுத்து நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று பிஹார் மாநில பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய திலிப் ஜெய்ஸ்வால், “நாளை காலை 10 மணிக்கு பாட்னாவில் உள்ள பாஜக தலைமையகமான அடல் சபஹாரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும். இதில், கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதில், சட்டப்பேரவை உறுப்பினர்களும், கட்சியின் மேலிட பார்வையாளர்களும் கலந்து கொள்வார்கள். இதனைத் தொடர்ந்து என்டிஏ கூட்டம் நடைபெறும்.
பதவியேற்பு விழா வரும் 20-ம் தேதி பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்குவதற்கான உறுதிமொழியை நாங்கள் ஏற்க இருக்கிறோம். புதிய அரசாங்கம் பொறுப்பேற்பதற்கான அனைத்துப் பணிகளும் நவ.21-ம் தேதிக்குள் நிறைவடையும்.” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜேடியு மூத்த தலைவர் விஜய் குமார் சவுத்ரி, “திங்கள் கிழமை கூடிய அமைச்சரவை கூட்டத்தில், தற்போதைய சட்டப்பேரவையை கலைப்பதற்கான முறைப்படியான பரிந்துரை அளிக்கப்பட்டது. இது நவ.19 முதல் அமலுக்கு வரும். இந்த பரிந்துரையை அடுத்து முதல்வர் நிதிஷ் குமார், ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து, அமைச்சரவை பரிந்துரையை தெரிவித்தார். சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், புதிய அரசாங்கம் பொறுப்பேற்பதற்கான நடைமுறைகளை ஆளுநர் மேற்கொள்வார்.” என தெரிவித்தார்.
நடந்து முடிந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், பாஜக 89, ஜேடியு 85, எல்ஜேபி (ஆர்வி) 19, ஹெச்ஏஎம் 5, ஆர்எல்எம் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. எதிர் தரப்பில் மகா கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், ஆர்ஜேடி 25, காங்கிரஸ் 6, சிபிஐ(எம்எல்) 2, ஐஐபி 1, சிபிஎம் 1 ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றன. இரு கூட்டணிகளிலும் இடம்பெறாத அகில இந்திய மஜ்லிஸ் இ இட்டஹாதுல் முஸ்லிமீம் கட்சி 5 தொகுதிகளிலும், பிஎஸ்பி 1 தொகுதியிலும் வெற்றி பெற்றன.