2015-ல் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தவரை அடித்துக் கொன்ற கும்பல்: வழக்கை வாபஸ் பெற உ.பி. அரசு மனு

புதுடெல்லி: கடந்த 2015-ல் உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்த காரணத்துக்காக முகமது அக்லாக் என்பவர் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

கிரேட்டர் நொய்டாவில் நடந்த அக்லக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து குற்றவாளிகள் மீதான வழக்குகளையும் வாபஸ் பெறும் பணியை உத்தரப் பிரதேச அரசு தொடங்கியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது தாத்ரியின் படுகொலை சம்பவம். மாட்டிறைச்சியை வீட்டில் வைத்திருந்ததாகக் கூறி முகமது அக்லாக், கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

முகமது அக்லாக் பசுவை கொன்றதாக கிராம மக்களுக்கு எழுந்த சந்தேகமே இதற்கு காரணமாக அமைந்தது. இந்த சம்பவம், தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள கவுதம புத்த மாவட்டத்தின் தாத்ரியில், பிஷாரா என்ற கிராமத்தில் நடைபெற்றது.

கடந்த 2015, செப்டம்பர் 28-ம் தேதி அன்று நடந்த இந்த படுகொலை சம்பவம் அந்த மாநிலத்தில் மட்டுமல்லாமல், தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு தழுவிய அளவில் இது, முதன் முதலாக நடைபெற்ற கும்பல் படுகொலையாக இருந்தது.

இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கை உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு வாபஸ் பெற விரும்புவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் முகமது அக்லாக் கொலை வழக்கு குற்றவாளிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற மனு அளிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதில், உ.பி அரசின் சட்டத்துறை சிறப்பு செயலாளர் முகேஷ் குமார் சிங், வழக்கை வாபஸ் பெறுவதற்கு ஒப்புதல் அளித்து கவுதம புத்த நகர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியதும் தெரிந்துள்ளது. உ.பி அரசின் அறிக்கை மற்றும் சட்ட வாதங்களை பரிசீலித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை கவுதம புத்த நகரின் கூடுதல் மாவட்ட அரசு வழக்கறிஞர் பாக் சிங் பாட்டியும் உறுதிப்படுத்தி உள்ளார். உ.பி அரசின் ஒப்புதலுடன், அக்லாக்கின் வழக்கை இப்போது முறையாக முடிக்கும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. இந்த சட்டப்பூர்வ செயல்முறை, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 321-இன் கீழ் எடுக்கவும் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து உ.பி மாநில அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க உள்ளார்.

பிஷாரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்த நாளன்று ஒலிபெருக்கியில் அக்லாக் ஒரு பசுவை கொன்று, அதன் இறைச்சியை தனது வீட்டில் சேமித்து வைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஒரு கும்பல் அவரது வீட்டைத் தாக்கியது. இந்த சம்பவத்தில் அக்லாக் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். அவருடன் வீட்டிலிருந்த அக்லாக்கின் மகன் தானிஷ் தாக்குதலில் படுகாயமடைந்தார்.

சம்பவம் நடந்த அதே இரவில் அக்லாக்கின் மனைவி இக்ராமன், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் 10 பேர் மீதும், அடையாளம் தெரியாத சுமார் 5 பேர் மீதும் புகார் அளித்தார். தொடர்ந்து இக்ராமன், அக்லாக்கின் தாய் அஸ்கரி, மகள் ஷாஹிஸ்தா மற்றும் மகன் தானிஷ் ஆகியோரின் வாக்குமூலங்களை பதிவாகின.

பாஜக தலைவர்கள்: இந்த கொலை வழக்கில் இரண்டு சிறார்கள் உட்பட மொத்தம் 16 பேரின் பெயர்களுடன் கடந்த 2015, டிசம்பர் 22-ம் தேதி அன்று குற்றப்பத்திரிகை தாக்கலானது. இதில் முக்கிய குற்றவாளிகளாக உள்ளூர் பாஜக தலைவர் சஞ்சய் ராணாவின் மகன் விஷால் ராணா மற்றும் அவரது உறவினர் சிவம் ஆகியோரும் இடம் பெற்றனர்.

சாட்சிகள் பல்டி: குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். மீதமுள்ள அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் பல சாட்சிகள் தங்கள் வாக்குமூலங்களை மாற்றிய விவகாரம் வாபஸ் பெறுவதற்கான முக்கிய வாதமாகி உள்ளது.

பசுவின் இறைச்சி: சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட இறைச்சி மாதிரி மதுராவில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டது. மார்ச் 30, 2017 தேதியிட்ட அறிக்கையில், அந்த இறைச்சி பசுவின் இறைச்சி என்பது உறுதியானது.

விரைவு நீதிமன்றத்தில் விசாரணை: இந்நிலையில், கவுதம புத்த நகரின் விரைவு நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெறுவதற்கான விண்ணப்பத்தை மாநில அரசாங்கம் தாக்கல் செய்துள்ளது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவு நீதிமன்றம் முடிவு செய்ய உள்ளது. பாதிக்கப்பட்ட அக்லாக்கின் குடும்பத்தினர் நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

வழக்கின் பிரிவுகள்: இந்தக் கொடூர சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் 302, 307, 147, 148, 149 ஆகியன பதிவாகின. பிறகு, இந்திய தண்டனை சட்ட பிரிவுகளான 323, 504, 458 மற்றும் 506 ஆகியனவும் சேர்க்கப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.