பீகாரில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.யு + பா.ஜ.க தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றியாக 202 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலை விட 15 இடங்கள் அதிகமாக 89 இடங்களில் பா.ஜ.க-வும், 42 இடங்கள் அதிகமாக 85 இடங்களில் ஐக்கிய ஜனதா தளமும் வெற்றிபெற்றன.

முக்கியமாகக் கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஓர் இடத்தில் மட்டுமே வென்ற சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து 19 இடங்களில் வென்றது.
மேலும், இக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) 5 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களிலும் வெற்றிபெற்றன.
இந்த நிலையில், பாட்னாவில் இன்று நடைபெற்ற ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்றத் தலைவராக நிதிஷ் குமார் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகவும் இன்றே தேர்ந்தெடுக்கப்பட்ட நிதிஷ் குமார், நாளை காந்தி மைதானத்தில் 10-வது முறையாக முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார்.

இந்தப் பதவியேற்பு விழாவில், நிதிஷ் குமாருடன் அவரின் கட்சியிலிருந்து 10 எம்.எல்.ஏ-க்களும், பா.ஜ.க-விலிருந்து 9 எம்.எல்.ஏ-க்களும், மற்ற 3 கூட்டணி கட்சிகளிலிருந்து தலா எம்.எல்.ஏ-வும் அமைச்சர் பதவியேற்பர் என்று கூறப்படுகிறது.
இதில், ஜே.டி.யு எம்.எல்.ஏ-க்கள் 10 பேரில் 8 பேரும், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் 9 பேரில் 8 பேரும் கடந்த அமைச்சரவையில் பதவியில் இருந்தவர்கள்.
மேலும், புதிதாக அமையவிருக்கும் அமைச்சரவையில் 4 தலித்துகள் உட்பட முஸ்லிம், யாதவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (EBC), ராஜ்புட்கள் மற்றும் பூமிஹார்கள் என அனைத்து சமூகங்களின் பிரதிநிதித்துவமும் கொண்ட சமநிலை பின்பற்றப்பட்டிருக்கிறது.