பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் மண்டலங்கள் 5,6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் 100 நாட்களுக்கு மேல் போராடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அம்பத்தூரில் நான்கு பெண் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை இன்று இரவோடு இரவாக கைது செய்ய காவல்துறை முயற்சிப்பதாக உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் காவல்துறையால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் தொடர்ந்து சென்னையின் பல இடங்களிலும் போராடி கைதாகியிருந்தனர்.
போராட்டம் நூறாவது நாளை நெருங்குகையில் மெரினா கடலில் இறங்கியும் கூட போராடியிருந்தனர். இதன்பிறகுதான் சென்னை உயர்நீதிமன்றம் தூய்மைப் பணியாளர்கள் அமைதியான முறையில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட நிபந்தனைகளோடு அனுமதி கொடுத்தது. இதைத் தொடர்ந்து வசந்தி, ஜெனோவா, கீதா, பாரதி என 4 பெண் தூய்மைப் பணியாளர்கள் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்

உழைப்போர் உரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் நடந்து வரும் இந்தப் போராட்டம் 7 வது நாளை எட்டியிருக்கிறது. இந்நிலையில், சில நிமிடங்களுக்கு முன் போராட்டம் நடக்கும் இடத்திலிருந்து உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘எங்களின் பெண் தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற நிபந்தனைகள் அத்தனையையும் கடைபிடித்து உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
7 நாட்களாக எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், இன்று போராடும் பெண்களை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் அவர்கள் நால்வரையும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்கின்றனர். உடனே அம்பத்தூர் காவல் ஆய்வாளர் மருத்துவர்களின் அறுவுறுத்தல்படி அவர்களை மருத்துவமனையில் சேருங்கள் என நோட்டீஸ் அனுப்புகிறார். நீதிமன்றம் மருத்துவர்களை பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறது. மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென்றெல்லாம் உத்தரவில் இல்லை. மேலும், ஒருவர் பலவீனமாகி மருத்துவமனையில் சேர்ந்தால் அவருக்கு பதில் இன்னொருவரை போராட்டத்தில் பங்கேற்க செய்யலாம். அதுவும் தீர்ப்பில் இருக்கிறது.

ஆனால், நாளை அம்பத்தூர் தொழிற்பேட்டை நிகழ்ச்சிக்கு உதயநிதி வருவதால், அதற்குள் எங்களை அப்புறப்படுத்த நினைக்கிறார்களோ எனும் அச்சம் எழுகிறது. அலுவலக கதவுகளை பூட்டிக் கொண்டு உள்ளே போராடிக் கொண்டிருக்கிறோம். நள்ளிரவில் இந்தப் பெண்கள் கைது செய்யப்படலாம். அப்படி எதுவும் நடந்தால் நிச்சயமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்வோம்.’ எனக் கூறியிருக்கிறார்.