மெரினா கடற்கரை மேட்டுக்குடியினருக்கு ஏற்ப‌ மாற்றியமைக்கப்படுகிறதா? – கேள்வியெழுப்பும் மீனவர்கள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

சமீபக் காலமாக மெரினா கடற்கரையில் நடைபெற்ற அழகுப்படுத்தல் முயற்சிகளான- மூங்கில் நிழற்குடை, வசதியான நாற்காலிகள், புகைப்பட இடங்கள், சுத்தமான நடைபாதை என பல மாற்றங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. கடற்கரைக்கு ஒரு புதிய தோற்றம் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.

ஆனால், இந்தக் கொண்டாட்டத்தின் நடுவே சில முக்கிய குறைகளையும் சிலர் சுட்டிக்காட்டி வருகின்றனர். குறிப்பாக, மெரினாவை வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் மீனவர்கள் சந்திக்கும் பாதிப்புகள் குறித்து கவலைகளை பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து மை விகடனுக்கு வந்த கட்டுரை பின்வருமாறு..

மெரினா கடற்கரை

சமீபகாலமாக, சென்னை மெரினா கடற்கரையில் மூங்கில் நிழற்குடைகள், சாய்வு நாற்காலிகள், தன்பட இடங்கள் (Selfie spot) போன்றவை அமைக்கப்பட்டு வருவதை சென்னை நகர மக்கள் அறிவர். “நீலக் கொடி மண்டலம்” (Blue Flag Zone) என்ற திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையை அழகுப்படுத்துவது என்ற பெயரில் இம்மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

மெரினா கடற்கரைக்கு செல்லும் மக்கள் இதுகுறித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், பொழுதுபோக்கிற்காக அல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மெரினாவைச் சார்ந்துள்ள மீனவ மக்களோ இத்திட்டம் தங்கள் வாழ்வாதாரத்தையும் கடலையும் நாசமாக்கும் என்று போராடி வருகின்றனர்.

மீனவ மக்களின் இந்த எதிர்ப்பின் காரணமாகவே, தொடக்கத்தில் கலங்கரை விளக்கம் அருகே கொண்டு வரத் திட்டமிடப்பட்டிருந்த நீலக்கொடி கடற்கரை திட்டம், அண்ணா நீச்சல்குளம் அருகே மாற்றப்பட்டு 20 ஏக்கர் பரப்பளவில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

மெரினா கடற்கரை

“நீலக்கொடி” (Blue Flag) என்பது “சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை” (FEE) எனும் டென்மார்க் நாட்டைச் சார்ந்த அரசு சாரா நிறுவனத்தால் வழங்கப் படும் சுற்றுச்சூழல் அங்கீகாரச் சான்றிதழாகும்.

இது முறையான கழிவு மேலாண்மை வசதிகள், மருத்துவ உதவி மையங்கள், நீரின் தரம் உள்ளிட்ட சுற்றுச் சூழல்,கல்வி மற்றும் பாதுகாப்பு சார்ந்த 33 அம்சங் களை பூர்த்தி செய்யும் கடற்கரைகள், சிறு படகுத் துறைமுகங்கள், சுற்றுலா படகுகளுக்கு அளிக்கப் படும் சுற்றுச்சூழல் குறியீடாகும்.

இந்த சர்வதேச அங்கீகாரத்தை பெற்றால் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும்; நாட்டின் பொருளாதாரத்தை மேம் படுத்த முடியும் என்று கூறி பல்வேறு நாடுகளும் இத்திட்டத்தை அமல்படுத்த முனைப்புக் காட்டி வருகின்றன.

இதே காரணத்தைக் கூறிதான் இந்தியாவில் மத்திய அரசும் தமிழக அரசும் நீலக்கொடி திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன.

தமிழ்நாட்டில் முதன்முதலாக 2021-இல் கோவளம் கடற்கரையில் நீலக்கொடி திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. அத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய பிறகு அக்கடற்கரையை வாழ்வாதாரமாக நம்பியிருந்த மக்களின் வாழ்நிலை தலைகீழாகிப் போனது.

நூற்றுக்கணக்கான கடைகள் இருந்த கோவளம் கடற்கரையில் தற்போது எந்தக் கடைகளையும் நம்மால் காண முடியவில்லை. மீனவர்கள் கடற்கரையில் தங்கள் படகுகளை நிறுத்துவதற்கோ வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை வைப்பதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.  இவையில்லாமல், மீன் பிடிப்பதற்கு கொடுக்கப்பட்ட பல்வேறு நெருக்கடிகளால், மீன் பிடித் தொழில் ஒன்றையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்ட சுமார் 500 குடும்பங்கள் நிர்கதியாகின.

இதுமட்டுமின்றி, நீலக் கொடி திட்டத்தின் விளைவாக கோவளம் கடற்கரையின் இயற்கை அமைப்பே சிதைக்கப்பட்டு வருவதாக வேதனைப்படும் இயற்கை ஆர்வலர் குமார், “கோவளம் கடற்கரையில் எந்த விதிகளையும் மதிக்காமல் மணல் மேடுகளுக்கு மேலே கட்டுமானக் குப்பைகளை கொட்டுகின்றனர்.

கடற்கரைக்கு மிக அருகிலேயே வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு என்ற அம்சமே இங்கு பின்பற்றப்படுவதில்லை. எந்தவொரு சுத்திகரிப்பு பணியையும் மேற்கொள்ளாமல், முகத்துவாரம் அருகில் தெற்கு எல்லையில் கற்கள் கொட்டப் பட்டிருக்கும் இடத்தின் அருகில் கழிவு நீரை அப்படியே கலந்து விடுவார்கள்” என்று ஆதங்கத்துடன் தெரிவிக்கிறார்.

கோவளத்தை போலவே மெரினா கடற்கரையிலும் முதலில், கடற் கரையை சுத்தப்படுத்துகிறோம் என்று கூறி உழைக்கும் மக்கள் விரித்துள்ள கடைகள் அனைத்தும் அகற்றப்படும். இதனால் இந்த வியாபாரத்தையே நம்பியிருக்கும் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்.

ஏழை, எளிய உழைக்கும் மக்களை துரத்தி விட்டு, அவ்விடங்களில் மேட்டுக் குடியினருக்கான வியாபாரத்தை நடத்த தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.

அடுத்ததாக,’அழகுப்படுத்துதல்’ என்ற பெயரில் மெரினாவில் மீன்பிடித் தொழிலை மேற்கொள் வதற்குத் தடை விதிக்கப்படலாம். இதனால்,மெரினா கடற்கரையில் மீன்பிடித்து வாழ்க்கை நடத்திவரும் திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் மற்றும் அயோத்திக் குப்பம் ஆகிய சுற்றுவட்டார மீனவக் கிராமங்களிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாக்கப்படுவர்.

மேலும், கடற்கரைகளில் வியாபாரம் நடத்துபவர்களில் பெரும்பாலானோர் மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பெண்களே என்பதால் ஒட்டுமொத்த சமுதாயத்தின் வாழ்க்கையும் சுக்குநூறாகும்.

மறுபுறம், மெரினா கடற்கரை மேட்டுக்குடியினருக்கு ஏற்ப‌ மாற்றியமைக்கப்பட்டால் தற்போது இருப்பதைப் போல உழைக்கும் மக்களால் அங்கு சென்று பொழுதுபோக்க முடியாது. விலைவாசி உயர்வு, உழைக்கும் மக்களை அச்சுறுத்தும் கட்டுப்பாடுகள், ஏற்றத்தாழ்வுகள் என மெரினா கடற்கரை உழைக்கும்வர்க்கத்திடமிருந்து அந்நியமாக்கப்பட்டு, திறந்த வெளி வணிக வளாகத்தை போல மாற்றியமைக்கப்படும் அச்சம் ஏற்படுகிறது.

சென்னை மெரினா கடற்கரை

மெரினாவில் நீலக்கொடி திட்டத்தின் முதல் கட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, காந்தி சிலை முதல் லூப் சாலையில் நொச்சி நகர் வரை 30 ஏக்கர் பரப்பளவில், திருவான்மியூர், பாலவாக்கம் மற்றும் உத்தண்டி ஆகிய கடற்கரைகளுக்கான இரண்டாம் கட்டத் திட்டத்தை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதனால், சென்னையில் உள்ள 40,000-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை எதிர்த்து கடந்த செப்டம்பர் 26 அன்று 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் கடலில் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்களுக்கு போராடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 இதுவரை இந்தியாவில் உள்ள 12 கடற்கரைகளுக்கு நீலக் கொடி அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதில் சென்னையின் கோவளம் கடற்கரையும் அடங்கும். அவ்வகையில் நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் நீலக் கொடி அங்கீகாரம் பெறும் நோக்கில் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காவல் நிலை மாற்ற அமைச்சகம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

 ஏற்கனவே மெரினா கடற்கரை கடலூரின் சில்வர் கடற்கரை காமேஸ்வரம் கடற்கரை நாகப்பட்டினம், அரியமான் கடற்கரை ராமநாதபுரம் ஆகிய இடங்களில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதனை இன்னும் விரிவுபடுத்தும் திட்டத்திற்கான அறிவிப்பை ஒன்றிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னையில் திருவான்மியூர் பாலவாக்கம் முத்தண்டி மற்றும் தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் அடுத்ததாக கீழ் புதுப்பட்டு (விழுப்புரம்) சாமியார் பேட்டை (கடலூர்) உள்ளிட்ட கடற்கரையில் நீலக்குடி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

 நகரமயமாக்கல் திட்டங்களின் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் பூர்வ குடி மக்களிடமிருந்து நகரம் பறிக்கப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து விவசாய நிலங்கள் பறிக்கப்படுகிறது. பழங்குடியின மக்களிடமிருந்து காடு மலைகள் பறிக்கப்படுகிறது அதேபோல் நீலக் கொடி உள்ளிட்ட திட்டங்களின் மூலம் 100க்குடி மீனவ மக்களிடம் இருந்து கடல் பறிக்கப்படுகிறது.

கடல் காடு நகரம் அனைத்தும் கார்ப்பரேட்களுக்கு தாரைவாக்கப்பட்டு மண்ணின் மைந்தர்களான கூறக்கூடிய மக்கள் அகதியாக்கப்படுகின்றனர். இதற்கு எதிரான அறவழிப்போராட்டத்தை கட்டமைப்பதன் மூலமாகத்தான் நம் வருங்கால சந்ததிகள் அமைதியாக வாழ இயலும். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.