தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிவகுமாருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ.28) வழங்கியிருக்கிறார்.
விழா மேடையில் பேசிய சிவகுமார், “2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி கலைஞர் நம்மை விட்டு மறைந்து விட்டார். அதே 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி கோவை இந்துஸ்தான் பல்கலைக்கழக வளாகத்தில் அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

திரைப்படத் துறையில் பல்வேறு கலைஞர்கள் கலந்து கொண்டார்கள். அந்த மேடையிலே பேசிய நான் நமது இன்றைய முதலமைச்சரைப் பார்த்து, ‘இன்று மஞ்சள் துண்டு போர்த்தப்பட்டு நாளை தமிழக முதலமைச்சர் ஆகப் போகின்ற அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்களே’ என்று குறிப்பிட்டு பேசினேன்.
அந்த வாழ்த்து பொய்யாகவில்லை. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 2021 ஏப்ரல் 7ஆம் தேதி முதலமைச்சரானார். இதோ இங்கு முதலமைச்சராக நம்மிடையே வந்து அமர்ந்திருக்கிறார்.
தந்தையின் வழியிலே மிகச்சிறந்த ஆட்சியை நடத்தி வருகிறார். அவருக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விருதை எனக்கு வழங்கிய இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் சிறுவயதிலிருந்து அதிகமாக சினிமாக்கள் பார்த்ததில்லை. 14 வயது வரை நான் பார்த்த மொத்த படங்கள் வெறும் 14தான்.
அதில் மறக்க முடியாத படங்கள் ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘இல்லறம்’, ‘இல்லற ஜோதி’, ‘ராஜா ராணி’ போன்ற படங்கள். அந்தப் படங்களில் வரும் கலைஞர் வசனங்களை 15 வயதிலே மனப்பாடம் செய்து விட்டேன்.

கலைஞர் என்னிடம், ‘நான் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுதவில்லை தம்பி. எழுதி பாஸ் செய்தால் ஐ.ஏ.எஸ். படிக்க சொல்வார்கள். எனக்கு மேற்கொண்டு படிக்க விருப்பம் இல்லை. அதனால் பரீட்சை எழுதாமல் தவிர்த்தேன்’ என்று என்னிடம் சொன்னார்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாத ஒரு இளைஞன், சங்க இலக்கியப் பாட்டுக்கு உரை எழுதி உள்ளார். அவரது வசனம் கற்பனையே பண்ண முடியாது. அந்த அளவுக்கு அமைந்துள்ளது.
அந்த இலக்கிய தாத்தாவுக்கு மகனாகப் பிறந்து இந்த மேடையில் இருக்கிற அவரின் வாரிசு, இன்றைக்குத் திறம்பட ஆட்சி செய்து, ‘காலை உணவு திட்டம்’, ‘புதுமைப்பெண் திட்டம்’, ‘நான் முதல்வன் திட்டம்’, ‘தமிழ்ப் புதல்வன் திட்டம்’, ‘வீடு தேடி மருத்துவம்’ என்று எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இன்று மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறார். இவர் மீண்டும் இந்தப் பதவியிலே நீடிக்க வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன்” என்றார்.