பிறரின் முதுகில் குத்துபவன் நான் அல்ல – டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி

பெங்களூரு,

கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் வருகிற 2028-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்துவதே நான் உள்ளிட்ட தலைவர்களின் நோக்கமாகும். நான் டெல்லிக்கு சென்றபோது 8 முதல் 10 எம்.எல்.ஏ.க்களை அழைத்து சென்றிருக்கலாம். அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. என்னுடன் எம்.எல்.ஏ.க்களை அழைத்து செல்வது பெரிய விஷயமில்லை.

காங்கிரஸ் தலைவராக இருக்கும் நான் 140 எம்.எல்.ஏ.க்கள் இடையே பாரபட்சம் பார்க்காமல், அனைவரையும் ஒன்றாக அரவணைத்து செல்ல வேண்டும். காங்கிரஸ் தலைவர் பதவி என்பது, 140 எம்.எல்.ஏ.க்களின் தந்தை போன்றதாகும். இதற்கு முன்பு குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது, அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த நான் நேர்மையாக பணியாற்றினேன்.

நான் எந்தளவுக்கு நேர்மையாக பணியாற்றினேன் என்பது, அந்த கடவுளுக்கு தெரியும். குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியை காப்பாற்ற இறுதி வரை களத்தில் நின்று போராடினேன். அதுபற்றி குமாரசாமியின் தந்தை தேவேகவுடாவுக்கு நன்கு தெரியும். நான் கூறுவதை எல்லாம் குமாரசாமி ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கலாம். அது அவரது தனிப்பட்ட விஷயம்.

பிறரின் முதுகில் குத்துபவன் நான் இல்லை. எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் எதிர்கொள்வேன். எனது வாழ்க்கை இதுவரை அப்படியே இருந்துள்ளது. யாருடைய முதுகிலும் குத்தியது இல்லை. அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கர்நாடக மாநில சூப்பர் முதல்-மந்திரி என்று பா.ஜனதா தலைவர்கள் கூறியுள்ளனர். அவர்களும் எதிர்க்கட்சி என்பதை காட்டுவதற்காக, இதுபோன்று பேசுகின்றனர்.

எனக்கும், முதல்-மந்திரி சித்தராமையாவுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். மல்லிகார்ஜுன கார்கேவை, பிரியங்க் கார்கே சந்தித்து பேசுவதில் என்ன தவறு இருக்கிறது. அவர்கள் 2 பேரும் முதலில் தந்தை, மகன் ஆவார்கள். முதல்-மந்திரி சித்தராமையாவை எனது வீட்டுக்கு விருந்துக்கு வர அழைத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.