ஜெரோதாவின் இணை நிறுவனர் நிகில் காமத்தின் ‘பீப்பிள் பை WTF’ என்கிற பாட்காஸ்டில் கலந்துகொண்டிருக்கிறார் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க்.
அந்தப் பாட்காஸ்ட்டில் எலான் மஸ்க் இந்தியர்கள் குறித்தும், ஹெச்-1பி விசா குறித்தும் பேசியுள்ளார்.
“திறமையான இந்தியர்களால் அமெரிக்கா நிறைய பலனடைந்திருக்கிறது. தற்போதைய ஹெச்-1பி விசா கெடுபிடி நடைமுறைக்கு, அதில் செய்யப்பட்ட மோசடிகளே காரணம். முந்தைய அரசாங்கம் எந்தவொரு கெடுபிடியும் இல்லாமல், ஹெச்-1பி விசாவை மிகவும் எளிதாகக் கொடுத்தது. அதுவும் ஒரு காரணம்.

திறமையான மக்கள் பற்றாக்குறை…
அமெரிக்காவிற்கு வரும் பிற நாட்டினரால், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோனது என்று கூறுவது எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியவில்லை.
நான் நேரடியாகப் பார்த்தவரையில் இங்கே எப்போதும் திறனுள்ள மக்கள் பற்றாக்குறை இருக்கிறது. கடினமான பணிகளைச் செய்துமுடிக்கும் திறமையான ஆட்களை இங்கே கண்டுபிடிப்பது மிகவும் சிரமமானது. அதனால், இன்னும் நிறைய திறமையான மக்கள் இங்கே இருந்தால் நல்லது.
ஹெச்-1பி விசா திட்டத்தை நிறுத்த வேண்டுமா?
என்னுடைய நிறுவனம் எப்போதும் திறமையான மக்களை பணியமர்த்துவதில் தான் கவனமாக இருக்கும். ஆனால், சில நிறுவனங்கள் ஹெச்-1பி விசாவில் மோசடி செய்கின்றனர்.
ஆனால், அதற்காக ஹெச்-1பி திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அந்த மோசடியை தான் சரிசெய்ய வேண்டும்” என்றார்.