ராஞ்சி,
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 135 ரன்களும், கே.எல்.ராகுல் 60 ரன்களும், ரோகித் 57 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன், பர்கர், கார்பின் போஷ் மற்றும் ஓட்னீல் பார்ட்மேன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி ஆடி வருகிறது.
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த ஆட்டத்தில் அடித்த சதத்தையும் சேர்த்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி இதுவரை 6 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் சச்சின் மற்றும் டேவிட் வார்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தலா 5 சதங்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள விராட் கோலி புதிய வரலாறு படைத்துள்ளார்.