கொழும்பு,
இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் சமீபத்தில் வங்க கடலில் உருவான டிட்வா புயலும் சேர்ந்து கொண்டது. இதனால், கனமழையுடன் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக வீடுகள், குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இலங்கையில் கனமழையில் சிக்கி இதுவரை 330-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 400 பேரை காணவில்லை. பலர் காயமடைந்து உள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவிக்கின்றது.
புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவியை இந்தியா வழங்குகிறது. இதற்காக, ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ். உதயகிரி ஆகிய கப்பல்கள் மூலம் கொழும்பு நகரில் நிவாரண உதவி பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து, இந்திய விமான படையின் 3 விமானங்களில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு உள்ளன. அதில், கூடாரங்கள், தார்ப்பாய்கள், போர்வைகள், சுகாதார நலன் சார்ந்த பொருட்கள் மற்றும் உடனடியாக சாப்பிட கூடிய உணவு பொருட்கள் உள்ளிட்ட 12 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. எனினும், புயல் பாதிப்புகளால் அந்நாட்டின் 3-ல் ஒரு பங்கு மக்கள் மின்சார இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகம் இன்றி தவித்து வருகின்றனர்.
இதேபோன்று, கனமழை தொடர்ச்சியாக 20 ஆயிரம் வீடுகள் சேதமடைந்து விட்டன. 1.08 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 2.19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு இதுவரை 53 டன்கள் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
புயல் பாதிப்பு செய்தியை தொடர்ந்து, 2 இந்திய கடற்படையின் கப்பல்களில் 9.5 டன்கள் நிவாரண பொருட்கள் உடனடியாக கொண்டு சேர்க்கப்பட்டன. இதுதவிர, இந்திய விமான படையின் 3 விமானங்கள் 31.5 டன்கள் அளவிலான நிவாரண பொருட்களையும், இதன்பின்னர் சுகன்யா கப்பலில் 12 டன்கள் நிவாரண பொருட்கள் என மொத்தம் 53 டன்கள் நிவாரண பொருட்கள் இலங்கையை சென்றடைந்துள்ளன.
ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் இருந்து புறப்பட்டு சென்ற சேதக் ஹெலிகாப்டர்கள், இந்திய விமான படையின் எம்.ஐ.-17 ஹெலிகாப்டர்கள் ஆகியவை இலங்கை விமான படையுடன் சேர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கர்ப்பிணிகள், முதியவர்கள் என பலர் மீட்கப்பட்டு வருகின்றனர். டிட்வா புயல் ஏற்படுத்திய பாதிப்புகளுடன், அது கொண்டு வந்த கனமழை இன்னும் சில நாட்களுக்கு தொடர கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால், பாதிப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.