பெலகாவி,
கர்நாடக மாநிலம் பெலகாவி (மாவட்டம்) தாலுகா முர்கோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். அந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் கடந்த மாதம் (நவம்பர்) 23-ந்தேதி அந்த மாணவி, தனது வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள மாவு அரைவை ஆலைக்கு மாவு அரைக்க சென்றாள். அப்போது அங்கு அதேப்பகுதியை சேர்ந்த மணிகண்டா தின்னிமணி, ஈரண்ணா ஆகியோர் வந்தனர். அவர்கள் சிறிது தூரம் சிறுமியை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
பின்னர் சிறுமி கிராமத்தின் வெளிப்பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தின் அருகே சென்றபோது, பின்தொடர்ந்து வந்த 2 பேரும் திடீரென்று சிறுமியின் வாயை பொத்தி கரும்பு தோட்டத்துக்குள் தூக்கி சென்றனர். அங்கு வைத்து 2 பேரும் சிறுமியை மாறி, மாறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய சிறுமி, இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினாள்.
இதற்கிடையே சிறுமியின் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக சிலர் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன அவர்கள் உடனே இதுபற்றி புகார் எதுவும் அளிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமியின் பெற்றோர், கூட்டு பலாத்காரம் குறித்து முர்கோடு போலீசில் புகார் அளித்தனர். இதனை அறிந்த மணிகண்டா, ஈரண்ணா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து முர்கோடு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.