பார்முலா1 கார்பந்தயம்: பியாஸ்ட்ரிடம் உதவி கேட்கமாட்டேன் – லான்டோ நோரிஸ்

அபுதாபி,

பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் 24-வது மற்றும் கடைசி சுற்றான அபுதாபி கிராண்ட்பிரி யாஸ் மரினா ஓடுதளத்தில் நாளை நடக்கிறது. இதில் வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்கிறார்கள். முதல் 10 இடங்களுக்குள் வருபவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். குறிப்பாக டாப்-5 இடங்களை பிடிப்பவர்கள் முறையே 25, 18, 15, 12, 10 வீதம் புள்ளிகளை பெறுவார்கள்.

ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் வாய்ப்பில் இங்கிலாந்தின் லான்டோ நோரிஸ் (408 புள்ளி), நடப்பு சாம்பியனான நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (396 புள்ளி), ஆஸ்திரேலியாவின் ஆஸ்கர் பியாஸ்ட்ரி (392 புள்ளி) ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது. நோரிஸ், அபுதாபி போட்டியில் வெற்றி கண்டால் சிக்கலின்றி முதல் முறையாக மகுடம் சூடி விடுவார். மாறாக சற்று பின்தங்கினால் வெர்ஸ்டப்பென் எத்தனையாவது இடத்தை பிடிக்கிறார் என்பதை பொறுத்து வெற்றி வாய்ப்பு அமையும். இதில் நோரிசும், பியாஸ்ட்ரியும் ஒரே அணியை (மெக்லரன்) சேர்ந்தவர்கள். இதனால் போட்டியின் போது நோரிஸ் முன்னிலை பெறவோ மற்ற விஷயங்களிலோ பியாஸ்ட்ரி ஒத்துழைப்பு கொடுக்க வாய்ப்புள்ளது.

இது பற்றி நோரிசிடம் நேற்று நிருபர்கள் கேட்டபோது, “பியாஸ்ட்ரியை எனக்கு சாதகமாக நடந்து கொள்வதற்கு அறிவுறுத்தும்படி அணி நிர்வாகத்தை நான் கேட்கப்போவதில்லை. இது பற்றி எதுவும் விவாதிக்கவில்லை. களத்தில் நான் முன்னால் செல்வதற்கு பியாஸ்ட்ரி அனுமதிப்பாரா? என்பது அவரது முடிவை பொறுத்தது. போட்டியின் முடிவு எப்படி அமைந்தாலும் கவலைப்படபோவதில்லை. வெர்ஸ்டப்பென் பட்டத்தை வென்றால் அவருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு, அடுத்த ஆண்டு போட்டியை எதிர்நோக்குவேன்” என்றார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.