“அவரவர் வரம்புக்குள் இருந்தால் நல்லது'' – தனது முன்னாள் IPL அணி உரிமையாளர் மீது கம்பீர் தாக்கு

இந்திய கிரிக்கெட் அணிக்கு கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, சொந்த மண்ணில் நடைபெற்ற 9 டெஸ்ட் போட்டிகளில் 5 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது.

அதிலும், நியூசிலாந்திடம் 3-0 எனவும், தென்னாப்பிரிக்காவிடம் 2-0 எனவும் முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்தது.

அணித் தேர்வில் கம்பீர் அதிகமாக தலையிடுவதாலும், ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஐ.பி.எல் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்வதாலும், பேட்டிங்கோ பவுலிங்கோ அந்தந்தப் பிரிவின் நிபுணர்களைக் (ஸ்பெஷலிஸ்ட் ப்ளேயர்களை) தேர்வு செய்யாமல் ஆல்-ரௌண்டர்களைத் தேர்வு செய்வதாலும்தான் சொந்த மண்ணில் இவ்வாறு மோசமாக டெஸ்ட் தொடர்களை இழக்க நேர்கிறது என கம்பீருக்கு மீது விமர்சனங்கள் குவிந்தன.

 கவுதம் கம்பீர் - அஜித் அகர்கார்
கவுதம் கம்பீர் – அஜித் அகர்கார்

இத்தகைய விமர்சனங்களுக்கிடையிலும் டெஸ்ட் தோல்விகளுக்கு, “சாம்பியன்ஸ் டிரோபியும், ஆசியக் கோப்பையும் வென்றதும் இதே கம்பீர்தான்” என சம்பந்தமே இல்லாமல் வைட் பால் தொடர்களை ஒப்பிட்டார் கம்பீர்.

அவர் சொன்னதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால், அந்த இரண்டு தொடர்களும் துபாயில் நடந்தவை.

இவ்வாறான சூழலில்தான் ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான டெல்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால், “சொந்த மண்ணில் நமது டெஸ்ட் அணி இவ்வளவு பலவீனமாக இருப்பதை நான் பார்த்ததாக எனக்கு நினைவில்லை.

ரெட் பால் (Red Ball) ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் தேர்வு செய்யப்படாவிட்டால் இதுதான் நடக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்தியா ஒரு ரெட் பால் ஃபார்மட் ஸ்பெஷலிஸ்ட் பயிற்சியாளரை மாற்ற வேண்டிய நேரம் இது” என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

பார்த் ஜிண்டால்
பார்த் ஜிண்டால்

இந்த நிலையில், நேற்று தென்னாப்பிரிக்காவுக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடரை வென்ற கையோடு, டெல்லி அணியின் இணை உரிமையாளரைப் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்திருக்கிறார் கம்பீர்.

நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கம்பீர், “முடிவுகள் (டெஸ்ட் தொடரில்) எங்களுக்கு சாதகமாக வராததால் நிறைய பேச்சுகள் வந்தன.

ஆனால் இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் இல்லை (கில்); இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் பேட்டிங் செய்யவில்லை. இதைப் பற்றி யாரும் பேசவில்லை.”

செய்தியாளர்கள் சந்திப்பில் நான் எந்த சாக்குபோக்கும் கூறாததால், உண்மையை யாரும் பேசக்கூடாது என்று அர்த்தமல்ல.

அணி ஒரு மாற்றத்தில் (Transition) இருக்கும்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஃபார்ம் பேட்ஸ்மேனான, 7 போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்தவரான கேப்டனை இழந்தால் முடிவுகள் கடினமாத்தான் இருக்கும்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில்
India Cricket Team Captain Shubman Gill

ஏனெனில் ரெட் பால் கிரிக்கெட்டில் அதிக அனுபவம் இல்லை. யாரும் அதைப் பற்றி பேசவில்லை.

பிட்ச் பற்றி என்னவெல்லாம் சொன்னார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

ஆனால், கிரிக்கெட்டுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்களெல்லாம் சில விஷயங்களைச் சொன்னார்கள்.

ஐ.பி.எல் அணியின் உரிமையாளர் (பார்த் ஜிண்டால்) பயிற்சியாளர் பொறுப்பை பிரித்துக் கொடுப்பது பற்றிக் கூறினார்.

இது ஒரு ஆச்சரியமான விஷயம். அவரவர் தங்கள் வரம்புக்குள் இருப்பது நல்லது. நாம் ஒருவரின் வரம்புக்குள் செல்லாதபோது, அவர்களும் நம் வரம்புக்குள் வர எந்த உரிமையும் இல்லை” என்று கூறினார்.

கம்பீர்
கம்பீர் – Gautam Gambhir

கம்பீரின் இத்தகைய பேச்சைத் தொடர்ந்து, `தென்னாப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட்டில் வெறும் 124 ரன்கள் டார்கெட்டை அடிக்கக் கூட 7 போட்டிகளில் 1,000 ரன்கள் அடித்த கேப்டன்தான் வேண்டுமா? அவர் மட்டும் இந்திய அணியில் வீரரா மற்றவர்கள் எல்லாம் வெறுமனே அணியில் இருக்கிறார்களா?’ என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.

முன்னதாக, 2018-ல் கொல்கத்தா அணி கம்பீரை ஏலத்தில் விட்டபோது பார்த் ஜிண்டாலின் டெல்லி அணி ரூ. 2.80 கோடிக்கு எடுத்து அணியின் கேப்டனாக்கியது.

ஆனால், கம்பீர் தலைமையில் டெல்லி அணி மோசமாக ஆடியதால் பாதியிலேயே தொடரிலிருந்து விலகியதோடு தனது சம்பளத்தையும் கம்பீர் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இந்தியா இவ்வாறு மோசமாகத் தோல்வியடையும்போது கேள்வியே எழுப்பக்கூடாது என்பது என்று கம்பீர் கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.