தூத்துக்குடியைச் சேந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரின் மனைவி கருத்து வேறுபாட்டால், இவரைப் பிரிந்து குழந்தையுடன், திருப்பூரில் சதீஷ்குமார் என்பவருடன் சேர்ந்து வசித்து வந்தார்.
இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி, தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் தனது மனைவியையும், குழந்தையையும் சதீஷ்குமார் கடத்திச் சென்றுவிட்டதாகப் புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், 366-ன் கீழ் சதீஷ்குமாரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இப்புகாரை விசாரித்த உதவி ஆய்வாளர் ஆறுமுகநயினார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்களுடன் திருப்பூருக்குச் சென்றனர். அவிநாசிபாளையம் காவல் நிலையத்திற்கு சதீஷ்குமார் மற்றும் அவரின் தந்தை ராமசாமி ஆகியோரை விசாரணைக்கு அழைத்தனர்.
அங்கு விசாரணைக்குப் பிறகு சதீஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரின் மனைவி மற்றும் குழந்தையை தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர்.
இதற்காக கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடு செய்திருந்த காரில் அனைவரும் பயணம் செய்தனர். அந்த கார், விருதுநகர் அருகே வந்து கொண்டிருந்தபோது வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த கிருஷ்ணமூர்த்தி, தனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த சதீஷ்குமாரின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்தார்.
இக்கொலை வழக்கில், கடந்த 2018-ம் ஆண்டு கிருஷ்ணமூர்த்திக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. காவலர்களின் நேரடிக் கட்டுப்பாட்டிலும் இருந்த ஒரு நபர் போலீஸாரின் கண் முன்னேயே கொலை செய்யப்பட்டது தொடர்பாக சதீஷ்குமாரின் தந்தை ராமசாமி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.

ஆணையத்தின் விசாரணையில், ”உதவி ஆய்வாளர் ஆறுமுகநயினார் மற்றும் தலைமைக்காவலர் முருகன் ஆகியோர் மிகவும் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டனர்” என்பதை காவல்துறையினரின் விசாரணை முடிவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்காக அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு 3 ஆண்டுகள் ஊதிய உயர்வு குறைக்கப்பட்டது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், காவல்துறையினரின் அலட்சியம் மனித உரிமை மீறலாக ஆணையம் தீர்மானித்துள்ளது. எனவே மகனை இழந்த தந்தைக்கு ரூ.3 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என அரசுக்குப் பரிந்துரைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.