“சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு 74% அதிகரித்திருக்கிறது" – முதல்வர் ஸ்டாலின்

உலகம் முழுவதும் இன்று இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டுவரும் நிலையில், இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளும், பா.ஜ.க ஆதரவாளர்களும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் இடங்களில் பிரச்னை செய்திருக்கின்றனர். மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அஸ்ஸாம், கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடர்பாக சாலைகளில் கடை வைத்து வியாபாரம் செய்யும் ஏழை,எளிய வியாபாரிகள் மிரட்டப்பட்டு கடைகள் அகற்றப்பட்டிருக்கிறது. சில இடங்களில் சர்ச் வாசல்களில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூட்டமாக அமர்ந்து பக்திப் பாடல்களைப் பாடும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது தாக்குதல்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது தாக்குதல்

இந்துத்துவ அமைப்புகளின் இதுபோன்ற செயல்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது!

பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் – மாண்புமிகு பிரதமர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.

மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் – ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி

ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது.

எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.