இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள T20 உலக கோப்பைக்கு இருவரையும் தயார் நிலையில் வைத்திருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பும்ரா மற்றும் ஹர்திக் இருவரும் ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு எடுத்தாலும், நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 11 முதல் தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஜனவரி 3 அல்லது 4 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Add Zee News as a Preferred Source

BCCI தகவல்
“பும்ரா மற்றும் ஹர்திக் இருவரும் ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு எடுப்பார்கள். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஜனவரி 3 அல்லது 4 ஆம் தேதி தேர்வு செய்யப்படும்” என்று BCCI அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த அணியில் முக்கிய தகவல் என்னவென்றால், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஒருநாள் அணியில் இருந்து விலகியிருந்த இஷான் கிஷன் மீண்டும் அழைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இஷான் கிஷன் சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஜார்கண்ட் அணிக்காக அமோக பெர்ஃபார்மன்ஸ் வழங்கி அணியை சாம்பியன் பட்டத்திற்கு கொண்டு சென்றார். அவரது சிறப்பான செயல்பாடு தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வொர்க் லோட் மேனேஜ்மென்ட்
பும்ராவை ஓய்வு எடுக்க வைப்பது BCCIயின் வொர்க் லோட் மேனேஜ்மென்ட் திட்டத்தின் ஒரு பகுதியாகும். கடந்த ஜனவரியில் கடுமையான முதுகு பிரச்சனையை சந்தித்த பிறகு BCCI பும்ராவின் ஃபிட்னஸை மிகவும் கவனமாக நிர்வகித்து வருகிறது. அவர் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடினார், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டது. இந்திய அணிக்கு பும்ரா மிகவும் முக்கியமான வீரர் என்பதால், அவரது உடல்நலனை கவனத்தில் கொண்டு BCCI முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இல்லாமல் இந்தியா சமாளிக்க முடியும், ஆனால் பும்ரா இல்லாமல் சமாளிப்பது கடினம் என்ற கருத்து இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் நிலவுகிறது.

ஹர்திக் பாண்டியாவின் காயம்
ஹர்திக் பாண்டியா தசை காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் துபாயில் நடந்த ஆசிய கோப்பை T20 போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியை தவறவிட்டார். “ஹர்திக் பாண்டியா தனது தொடை தசை காயத்தில் இருந்து நன்றாக குணமடைந்து வருகிறார். அவர் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மையத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த காயத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில், உடனடியாக 50 ஓவர்கள் போட்டியில் விளையாடுவது ஆபத்தானது. T20 உலகக் கோப்பை வரை BCCI மருத்துவ குழுவும் ஹர்திக்கும் T20 போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்” என்று BCCI அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
T20 உலகக் கோப்பை அணி
டிசம்பர் 20 ஆம் தேதி இந்தியாவின் T20 உலக கோப்பை 2026 அணி அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட அணியில் பும்ரா மற்றும் ஹர்திக் இடம்பெற்றுள்ளனர். ஷுப்மன் கில் அணியில் இருந்து நீக்கப்பட்டு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 11 முதல் தொடங்குகிறது. வடோதராவில் முதல் போட்டியும், ராஜ்கோட்டில் இரண்டாவது போட்டியும், இந்தூரில் மூன்றாவது போட்டியும் நடைபெறும். அனைத்து போட்டிகளும் மதியம் 1:30 மணிக்கு தொடங்கும். T20 தொடர் ஜனவரி 21 முதல் நாக்பூரில் தொடங்கி ஜனவரி 31 வரை நடைபெறும்.
About the Author
RK Spark