இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை ICC ஆண்கள் T20 உலக கோப்பை நடைபெற உள்ளது. இதற்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணி ஜனவரி 1 வியாழக்கிழமை அன்று தங்களது அணியை அறிவித்துள்ளது. இந்த 15 பேர் கொண்ட அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்படாதது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய பந்துவீச்சு துறையை தலைமை தாங்கி வரும் ஸ்டார்க், T20 உலக கோப்பை அணியில் இடம் பெறவில்லை. ஆனால், காயத்தால் விலகி இருக்கும் பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேஸல்வுட் ஆகியோர் இந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Add Zee News as a Preferred Source

ஏன் ஸ்டார்க் இல்லை?
ஸ்டார்க் தேர்வு செய்யப்படாததற்கு முக்கிய காரணம் அவர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வை அறிவித்துள்ளார். 35 வயதான இடது கை வேக பந்துவீச்சாளர் ஸ்டார்க், கடந்த செப்டம்பர் 1ம் தேதி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். 2012 முதல் 2024 வரை ஆஸ்திரேலியாவுக்காக 65 டி20 போட்டிகளில் விளையாடி 79 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டார்க், ஆஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக டி20 விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஆடம் ஜாம்பாவுக்கு (130 விக்கெட்டுகள்) அடுத்தபடியாக உள்ளார் ஸ்டார்க். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதற்காக டி20 கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக ஸ்டார்க் கூறியிருந்தார். 2027ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கவனம் செலுத்த விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார். எனினும், இந்திய பிரீமியர் லீக்கில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என்று ஸ்டார்க் அறிவித்துள்ளார்.
புதிய வீரர்கள் அறிமுகம்
மிட்செல் ஓவன் மற்றும் பென் டுவார்ஷுயிஸ் ஆகியோரும் இந்த ஆஸ்திரேலியா அணியில் தேர்வு செய்யப்படவில்லை. பிக் பாஷ் லீக்கில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு முதல் பட்டத்தை வென்றுக்கொடுத்த ஓவனுக்கு IPL ஒப்பந்தமும் கிடைத்தது. டுவார்ஷுயிஸ் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடி சிறப்பாக செயல்பட்டார். ஆனால், தேர்வுக் குழு நிர்வாகிகள் ஸ்பின்னர்கள் மீது நம்பிக்கை வைத்து கூப்பர் கன்னோலி மற்றும் மேத்யூ குன்மேன் ஆகியோரை அணியில் எடுத்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கை ஆடுகளங்கள் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அதிக ஸ்பின்னர்களை கொண்ட அணியை உருவாக்கியுள்ளனர்.

கன்னோலி கடந்த ஜூலை 2025ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக கடைசியாக டி20 போட்டியில் விளையாடியவர். இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை ஸ்பின்னரான இவர், இந்த BBL தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியா பிப்ரவரி 11 அன்று கொழும்பில் அயர்லாந்துக்கு எதிராக தனது முதல் போட்டியை விளையாடவுள்ளது. குரூப் கட்டத்தில் ஜிம்பாப்வே, இலங்கை மற்றும் ஓமான் ஆகிய அணிகளையும் சந்திக்கும்.
அணி முழு விவரம்
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கன்னோலி, பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேஸல்வுட், ட்ராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), மேத்யூ குன்மேன், க்ளென் மாக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோயினிஸ், ஆடம் ஜாம்பா.
About the Author
RK Spark