சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்: ஆரோக்கியத்தோடு ஆனந்தமும் அருளும் ஈசன்!

ஈசன் கோயில்கொண்ட தலங்கள் ஏராளம் ஏராளம். அவற்றில் அவர் மருந்தீஸ்வரராக வைத்தியநாதராக நோய் நொடிகள் நீக்கும் வரம் அருள்பவராகக் கோயில்கொண்ட தலங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அப்படிப்பட்ட தலங்களில் முக்கியமானது திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில். சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் திருவான்மியூரில் அமைந்திருக்கும் இந்தக் கோயில் புராணகால சிறப்பு பெற்றது.

`வான்மீகம்’ என்று சொல்லப்படும் புற்றுகள் நிறைந்த இடம் என்பதால், இது `வான்மிகியூர்’ என்றானது என்கிறார்கள். வால்மீகி முனிவர், தனது களவு வாழ்க்கையின் சாபங்கள் தீர மார்க்கண்டேய மகிரிஷியின் வாக்குப்படி சிவத்தலங்களை தரிசனம் செய்துவந்தார். அப்போது இந்த ஆலயத்தின் வடமேற்கு மூலையில் இருக்கும் வன்னி மரத்தடியில்தான் தவமிருந்து, ஈசனைத் தரிசித்து சுயம்புலிங்கத்தை பெற்றார் எனவும் தலவரலாறு கூறுகிறது. மேலும் திருவான்மியூரிலேயே வால்மீகி முனிவரின் ஜீவசமாதியில் இருந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்

தொண்டை மண்டலத்தின் மயிலைக்கு அடுத்து திருவான்மியூரே சிறப்பானது என்று போற்றுகிறார்கள் அடியவர்கள். இங்குதான் 7 – ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட மருந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பாவநாசினி, ஜன்மநாசினி என இரு திருக்குளங்களைக் கொண்டு கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலில் கணபதி, முருகர், தட்சிணாமூர்த்தி, துர்கை… எனப் பரிவார தெய்வங்களோடு ஆலயம் சிறப்புற பிரமாண்டமாக இருந்து வருகிறது.

சந்திரனும் சூரியனும் ஒருசேர இங்கு வந்து வழிபட்டதால், மற்ற கிரகங்கள் இங்கு மறைந்து நின்றன எனவும், அதனாலேயே இங்கு நவகிரக சந்நிதி கிடையாது என்றும் கூறப்படுகிறது. அருள் வழங்கும் அன்னை உமையவள் இங்கு `சொக்கநாயகி’ எனும் திரிபுரசுந்தரியாக நின்ற கோலத்தில் காட்சிதருகிறாள். மனமுருகி தன்னைத் தொழுவோருக்கு அருள்பாலிக்கும் இந்த அன்னை பாசம், அங்குசம் தாங்கி, அபய வரத ஹஸ்தம் காட்டும் திருக்கரங்களோடு அடைக்கலம் தந்துவருபவள் அன்னை திரிபுரசுந்தரி. அன்னையின் ஆலயத்தின் வெளிப்புறம் தூணில் இருக்கும் சரபேஸ்வரர் வெகு சிறப்பானவர்.

புராண காலத்தில் வசிஷ்ட மாமுனியின் யாகத்தில் பால் சொரிய தாமதித்த காரணத்தால் காமதேனு சாபம் பெற்றது. இதன் காரணமாக சாதாரணப் பசுவாக மாறி, பூலோகம் வந்தது. தன் சாபம் நீங்கப் பூவுலகின் புண்ணிய க்ஷேத்திரமான திருவான்மியூர் வந்தடைந்தது அந்தத் தெய்வப் பசு. ஓங்கி, உயர்ந்து நின்ற புற்றுகளிடையே இருந்த சுயம்புலிங்கத்தை கண்டு அதன் மீது பால் சொரிந்து தன் சாபம் தீருமாறு வேண்டிக்கொண்டது. அப்போது அதன் கால்குழம்பு தெரியாமல் லிங்கத் திருமேனியில் பட அது அப்படியே தடமாகப் பதிந்தது. இன்றும் பால்வண்ணநாதர் அந்தக் குழம்புத் தழும்போடு இத்தலத்தில் காட்சி அருள்கிறார்.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர்

அகத்தியருக்கு ஈசன் இத்தலத்திலும் திருமணக் கோலம் காட்டி அருளினார். மேலும் இந்த உலகம் உய்ய சித்த வைத்திய முறைகளை இங்குள்ள வன்னி மரத்தின் அடியில்தான் உபதேசம் செய்தார். எனவே இந்தத் தலம் அகத்தியரையும் வழிபட உகந்த தலம். ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாத பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் உற்சவத்தின் போது ஈசன் அகத்தியருக்கு திருக்காட்சி அருளிய நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது. மேலும் வால்மீகி முனிவருக்கும் நடனக் காட்சி அருளிய சம்பவமும் நிகழ்த்தப்படும்.

இந்த ஆலயத்தின் பழைமையை உணர்த்தும் வகையில் பல்வேறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழர்கால கல்வெட்டுகள் பல இங்கு காணப்படுகின்றன. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இருவராலும் பாடல்பெற்றது இத்தலம்.

இத்தல ஈசனின் திருமேனி மேற்கு நோக்கி அருள்கிறது. ஆதியில் ஈசன் கிழக்கு நோக்கியே கோயில் கொண்டிருந்தார் என்றும் அவர் மேற்கு நோக்கித் திரும்பியதன் பின்னணியில் ஒரு சம்பவம் உண்டு என்றும் சொல்கிறார்கள். அந்த சம்பவம் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

அப்பையதீக்ஷிதர் என்னும் மகான் ஈசன் மீது பெரும் பக்தி கொண்டவர். ஈசனை தரிசனம் செய்யும் ஆவலில் அவர் வந்தபோது ஆலயத்துக்குச் செல்லும் வழி வெள்ளத்தால் சூழ்ந்திருந்தது. அதைக் கண்டு கலங்கிய அவர், ஈசனின் தரிசனம் வேண்டுமே என்று மனமுருகவேண்டினார். அப்போது அவரின் குறையைத் தீர்க்கும் வண்ணம் ஈசன் மேற்கு நோக்கித் திரும்பி தீக்ஷிதருக்குக் காட்சி கொடுத்தாராம்.

மருந்தீசுவரர் கோயில்

இங்கே மூலவருக்கு வேதபுரீஸ்வரர், வான்மீகநாதர், ஆமுக்தீஸ்வரர், பால்வண்ண நாதர், தேனுமுக்தீஸ்வரர், திரிபுராந்தகர், சித்தநாதர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். உற்சவருக்கு `தியாகராஜ பெருமான்’ என்பது திருநாமம். இங்கு அதிகாலையில் நடைபெறும் கோபூஜை விசேஷமானது. அதேபோன்று அர்த்தஜாம பால் அபிஷேகமும் சிறப்பாக நடைபெறும். இங்கு வழங்கப்படும் அபிஷேகப் பாலே சகல வியாதிகளுக்கும் மருந்தாக பக்தர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

நோய் தீர்க்கும் மருத்துவனாக விளங்கி வாழும்போது ஆரோக்கிய வாழ்வையும் வாழ்வுக்குப் பின் பிறவிப் பிணி தீர்க்கும் மருத்துவனாகவும் விளங்கி அருள் செய்யும் இந்த ஆலயத்துக்கு ஒருமுறை சென்று தரிசனம் செய்து வாருங்கள். வாழ்வில் ஆரோக்கிய வாழ்வோடு ஆனந்தமும் கிடைக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.