போதைப்பொருள் கடத்தல் வழக்கு: கோர்ட் கஸ்டடியிலிருந்த ஆதாரம் அழிப்பு; கேரள முன்னாள் அமைச்சருக்கு சிறை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் ஆண்டனி ராஜூ. ஜனாதிபத்திய கேரளா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் அக்கட்சியின் துணைத் தலைவராகவும் உள்ளார்.

பினராயி விஜயன் கேரள மாநில முதல்வராக இரண்டாவது முறை பதவியேற்றபோது கூட்டணி ஒப்பந்தத்தின்படி முதல் இரண்டரை ஆண்டுகள் அமைச்சராக இருந்தார் ஆண்டனி ராஜூ. சாலைப் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

ஆண்டனி ராஜூ வழக்கறிஞராக இருந்த சமயத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கோர்ட் கஸ்டடியில் இருந்த ஆதாரத்தை அழித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் இப்போது தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்
போதைப்பொருள் கடத்தல்

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஸால்வதோர் என்பவர் 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ம் தேதி விமானம் மூலம் கேரளா வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவரைப் பரிசோதித்தபோது உள்ளாடையில் மறைத்து வைத்து 2 பாக்கெட் போதைப்பொருட்கள் கடத்தி வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வழக்கு திருவனந்தபுரம் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது, ஆண்ட்ரூ ஸால்வதோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரின் ஜூனியர் வழக்கறிஞராக ஆண்டனி ராஜூ இருந்தார். அப்போது கோர்ட்டில் உதவியாளராகப் பணிபுரிந்த ஜோஸ் என்பவரின் உதவியுடன் கோர்ட் கஸ்டடியில் இருந்த உள்ளாடையை வெளியே எடுத்துவந்து, அதை வெட்டி சின்ன அளவில் தைத்து மறுபடியும் வைத்துவிட்டார்.

அந்த வழக்கில் உள்ளாடையின் அளவில் வித்தியாசம் இருந்ததாகக் கூறி ஆண்ட்ரூ ஸால்வதோர் விடுவிக்கப்பட்டார். பின்னர் மற்றொரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆண்ட்ரூ ஸால்வதோர், அவருடன் சிறையில் இருந்த சக கைதியிடம் கோர்ட் கஸ்டடியில் இருந்த உள்ளாடையை வெட்டி சிறிதாக்கி தண்டனையில் இருந்து தப்பித்த விவரத்தைத் தெரிவித்தார்.

கோர்ட் கஸ்டடியிலிருந்த உள்ளாடையின் அளவு குறைக்கப்பட்ட விவரம் அதன்பின்னர் மெல்ல வெளியே கசிந்தது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் 1994-ம் ஆண்டு வழக்குப் பதியப்பட்டது.

குற்றம் செய்தவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட உள்ளாடையின் அளவை மாற்றி ஆதாரங்களை அழித்ததாக விசாரணை அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் கோர்ட் ஊழியரான ஜோஸ் மற்றும் ஆண்டனி ராஜூ ஆகியோர் மீது 1994-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நெடுமங்காடு ஜூடீசியல் ஃபஸ்ட் கிளாஸ் கோர்ட்டில் நடந்துவந்தது.

இந்த வழக்கை ரத்துச் செய்ய வேண்டும் எனக்கோரி ஆண்டனி ராஜூ சுப்ரீம் கோர்ட் வரை மனு அளித்திருந்தார். விசாரணை நடவடிக்கையைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனச் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

29 சாட்சிகளில் 19 பேர் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நெடுமங்காடு ஃபஸ்ட் கிளாஸ் கோர்ட் ஆதாரங்களை அழித்ததாக முன்னாள் அமைச்சர் ஆண்டனி ராஜூ மற்றும் ஜோஸ் ஆகியோருக்குத் தலா 3 ஆண்டு சிறைத்தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆண்டனி ராஜூ
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆண்டனி ராஜூ

2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றுள்ளதால் ஆண்டனி ராஜூ-வின் எம்.எல்.ஏ பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆண்டனி ராஜூ இனி ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆண்டனி ராஜூ மற்றும் ஜோஸ் ஆகியோருக்கு ஒரு மாதம் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்துகொள்ளலாம். மேல்முறையீட்டில் அவர்களது தண்டனையை கோர்ட் நிறுத்திவைத்தால் ஆண்டனி ராஜூ தேர்தலில் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.