பெரம்பலூர்: போலீஸ் கஸ்டடியில் இருந்த ரௌடி மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு! – 3 போலீஸார் காயம்

மதுரையைச் சேர்ந்த பிரபல ரௌடி வெள்ளைக்காளி. இவர் மீது 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதுதவிர, பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக வேறு சில வழக்குகளும் இவர்மீது இருக்கின்றன. இந்நிலையில், நேற்று புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வெள்ளைக்காளியை ஒரு விசாரணைக்காக ஆஜர்படுத்திவிட்டு, சென்னைக்கு புழல் சிறையில் அவரை அடைப்பதற்காக வாகனத்தில் போலீஸார் அழைத்து சென்று கொண்டிருந்தனர். அவர்களது வாகனம் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையில் உணவு சாப்பிடுவதற்காக நிறுத்தப்பட்டது.

spot

அப்போது, பாதுகாப்புக்காக சென்ற போலீஸார் மற்றும் ரௌடி வெள்ளைக்காளி ஆகியோர், உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென இரண்டு கார்களில் அங்கு வந்த மர்மம் கும்பல், போலீஸாரின் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது.

அப்போது, வெடிகுண்டு சத்தத்தால் நிலைகுலைந்த தருணத்தைப் பயன்படுத்தி, அந்த கும்பல் கைதி வெள்ளகாளியை வெட்டிக் கொலை செய்ய முயன்றது. தடுக்க முயன்ற போலீஸ் வாகன ஓட்டுநர் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த 4 காவலர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாகவும் சொல்கிறார்கள். இதில், காவலர்கள் விக்னேஷ் குமார், மாரிமுத்து, பாண்டி ஆகியோர் காயம் அடைந்தனர். ரௌடிக்கு பெரிதாக காயம் எதுவும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

investigation

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், போலீஸார் வாகனம் மீது நாட்டு வெடி வீசி ரௌடி வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், பாதுகாப்பு போலீஸ் எஸ்.ஐ ராமச்சந்திரன் என்பவர் தனது துப்பாக்கியால் சுட்டபோது, நாட்டுவெடிகுண்டை வீசிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர் எனவும் சொல்லப்படுகிறது.

காவலர்களின் பாதுகாப்பில் இருந்த ரௌடி மீது நாட்டுவெடிகுண்டை வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் குறித்து மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அதில், ‘திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளைக்காளி என்ற குற்றவாளியை அழைத்துச் சென்று கொண்டிருந்தோம். வாகனங்களில் ஏற்கனவே ஆயுதம் தாங்கிய போலீஸார் இருந்தனர்.

balakrishnan

இடையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, மர்ம நபர்கள் வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்றனர். அப்போது, பாதுகாப்புக்காக இருந்த போலீஸ் உடனடியாக குற்றவாளியை பாதுகாத்தார். போலீஸ் எஸ் கார்டு எஸ்.ஐ, உடனடியாக துப்பாக்கியால் குற்றவாளிகளை நோக்கி சுட்டபோது, அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தப்பி சென்றவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்’ என்று தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி கண்டித்துள்ளார். இதுகுறித்து, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

“தமிழக சட்டமன்றத்தில் இன்று பொம்மை முதல்மைச்சர் ஸ்டாலின் தன் முதுகை தானே தட்டிக்கொண்டு பெருமை பேசி வந்த நேரத்தில், திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெரம்பலூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறை வாகனம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரையைச் சார்ந்த வெள்ளைக்காளி என்ற ரௌடியை காவலர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லும் போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த வெடிகுண்டு வீச்சில் ரௌடியின் பாதுகாப்பிற்காக வந்த 4 காவலர்கள் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

police

குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையை பார்த்தோ, இந்த அரசை பார்த்தோ கிஞ்சித்தும் அச்சமில்லை என்ற நிலைதான் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில், ஆட்சி சக்கரத்தை ஏனோ தானோ என்று சுழற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார் என்று தெரியவில்லை. காவல்துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதல்வர் ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் தனது எக்ஸ் தள பதிவில்,

“பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை அருகே பிரபல ரௌடியை அழைத்து வந்த காவலர்கள் 2 பேர் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு இந்த ஒற்றைச் சம்பவமே சாட்சி!. துருப்பிடித்த இரும்புக்கரத்தைக் கொண்டு மக்கள் பாதுகாப்பை செதில் செதிலாகச் சிதைத்தது மட்டுமல்லாது, தற்போது சீருடை அணிந்த காவலர்கள் பாதுகாப்பையும் சூறையாடி, தமிழகத்தைப் பேரழிவில் நிறுத்தியுள்ள கேடுகெட்ட ஆட்சி தான் நாடு போற்றும் நல்லாட்சியா, முதல்வர் ஸ்டாலின் அவர்களே?.

instant spot

சமூக வலைதளத்தில் மட்டும் களமாடி, மக்கள் பாதுகாப்பைக் களவாடும் ஆட்சியை இனியும் மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!. திறனற்ற நிர்வாகத்தால் தமிழகத்தை வன்முறைக் களமாகவும், ரௌடிகளின் கூடாரமாகவும் மாற்றிய திராடவிட மாடல் ஆட்சி தமிழக மக்களால் அழித்தொழிக்கப்படும் நாள் தொலைவில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். பா.ம.க அன்புமணியும் இந்த சம்பவம் குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

போலீஸ் பாதுகாப்பில் அழைத்து செல்லப்பட்ட வாகனம் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.