மகாராஷ்டிரா: ஆயுதத் தொழிற்சாலையில் வெடிவிபத்து; 17 பேர் பலியான சோகம்; பிரதமர் இரங்கல்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள ரவுல்காவ் என்ற இடத்தில் எஸ்.பி.எல். எனர்ஜி லிமிடெட் என்ற ஆயுத தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதில் டெட்டனேட்டர், துப்பாக்கி பவுடர் உட்பட பல்வேறு விதமான ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தொழிற்சாலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது.

இதில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 17 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர். தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டு நாக்பூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். வெடிவிபத்து டெட்டனேட்டர் தயாரிப்பு பிரிவில் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் தெரியவில்லை. வெடி விபத்து காரணமாக ஏற்பட்ட சத்தம் ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் வரை கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

வெடி விபத்து ஏற்பட்ட பகுதியில் கரும்புகை மண்டலம் சூழ்ந்து இருந்தது. விபத்து நடந்தபோது 25 முதல் 30 தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். வெடி விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிலர் சிக்கிக்கொண்டனர். அவர்களை தீயணைப்புத் துறையினர் பல மணிநேரமாக மீட்டனர்.

இது குறித்து மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ”நாக்பூர் அருகில் ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவம் துரதிஷ்டவசமானது. சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரும் நேரில் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு வருகின்றனர். இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.