கும்பகோணம், கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர்: மனித உருவில் வந்த சிவன்… நோய் தீர்க்கும் திருத்தலம்!

சிவவடிவங்களில் நடராஜர் திருமேனி மிகவும் விசேஷமானது. சிவன் அபிஷேகப்பிரியர். அவருக்குத் தினமும் அபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் நடராஜப் பெருமானுக்கோ மார்கழித் திருவாதிரை, ஆனித் திருமஞ்சனம் என ஆண்டில் 5 நாள்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும்.

அவற்றில் ஒன்று மாசி சதுர்த்தசி. மாசி மகத்துக்கு முன்புவரும் சதுர்த்தசி நாளில் நடராஜப் பெருமானைத் தரிசித்தாலோ அவருக்கு நிகழும் அபிஷேகங்கள் கண்டாலோ வாழ்வில் சந்தோஷம் பெருகும். செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.

சிவபெருமான் நடராஜராக அருளும் தலங்களில் முக்கியமானது கோனேரிராஜபுரம். கும்பகோணம் – காரைக்கால் பாதையில், எஸ்.புதூர் எனும் ஊருக்கு அருகில் உள்ளது கோனேரிராஜபுரம். இத்தல மூலவர் உமாமகேஸ்வரர்.

துர்கை மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். எமதர்மன் திருக்கடையூரில் ஏற்பட்ட பயத்தைப் போக்க இந்தத் துர்கையை வழிபாடு செய்துள்ளான். ஒரே மூலஸ்தானத்தில் 6 விநாயகர் அமர்ந்து விநாயகர் சபையாக அருள்பாலிக்கிறார்கள்.

நந்திபகவான் இங்கு ஈசனை வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது. எனவே பிரதோஷ காலத்தில் இங்கு வழிபாடு செய்தால் பல மடங்கு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர்
கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர்

இங்குள்ள சிவாலயத்தில் காட்சி தரும் ஸ்ரீநடராஜர் விக்கிரகம் விசேஷமானது. பஞ்சலோகத்தால் ஆன இந்த விக்கிரகத்தின் மார்பில்… மனித உடலில் இருப்பது போன்று ஒரு ‘மரு’வையும் முடியையும் காணலாம். இந்த விக்ரகத் திருமேனி உருவான சம்பவம் சிலிர்ப்பூட்டுவது.

சோழ மன்னன் ஒருவரது கனவில் தோன்றிய இறைவன், கோனேரிராஜபுரம் சிவாலயத்தில் நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி பணித்தார்.

சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து அவரிடம், ”கலைநுட்பத்துடன் கூடிய பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை 90 நாள்களுக்குள் வடிக்க வேண்டும். அது, அளவில் பெரிதாகவும் அனைவரும் பாராட்டும்படியும் இருக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார் மன்னர்.

சிவ பக்தரான அந்த சிற்பி, இறைவனை வணங்கி, விக்கிரகபணியைத் தொடங்கினார். ஆனால், அது அவ்வளவு சுலபம் அல்ல என்பதை விரைவில் புரிந்து கொண்டார். ஒவ்வொரு முறையும் அவர், பஞ்சலோகத்தை உருக்கி, அச்சில் வார்க்கும் போது ஏதேனும் ஒரு குறை தென்படும்; விக்கிரகம் முழுமை அடையாது. சிற்பி எவ்வளவோ முயன்றும், காரணத்தை அறிய முடியவில்லை.

நாள்கள் நகர்ந்தன. பணி எந்த அளவில் உள்ளது என்பதை அறிய சிற்பக்கூடத்துக்கு வந்தார் மன்னன். ‘விக்கிரகம் இன்னும் தயாராகவில்லை’ என்பதை அறிந்து சினம் கொண்டவர், ”இன்னும் இரண்டு நாள்களில் விக்கிரகம் தயாராகவில்லை எனில், உம் தலை உருளும்” என்று ஆவேசத்துடன் கிளம்பிச் சென்றார்.

கவலையில் ஆழ்ந்த சிற்பி, ‘அம்பலவாணா… இது என்ன சோதனை” என்று இறைவனையே தியானித்து கண்ணீர் வடித்தார். அவர் அருகில், பெரிய உலைகலன் ஒன்றில் பஞ்சலோகம் கொதித்துக் கொண்டிருந்தது.

கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர்  கோயில்
கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர் கோயில்

அப்போது, ‘ஐயா’ என்ற அழைப்பொலி கேட்டு, வாயிலுக்குச் சோகத்துடன் வந்தார் சிற்பி. அங்கு வயதான சிவனடியார் ஒருவர் நின்றிருந்தார். ”ஐயா, தாகம் உயிர் போகிறது. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தாருங்களேன்… சுடுதண்ணீராக இருந்தால் நன்று” என்றார் சிவனடியார்.

சிற்பிக்கோ எரிச்சல். ‘இன்னும் இரண்டு நாள்களில் என் தலை உருளப் போகிறது; இவருக்குச் சுடுதண்ணீர் வேண்டுமாம்’ என்று சலித்துக் கொண்டவர், ”உள்ளே, உலைகலனில் கொதிக்கிறது… போய்க் குடியுங்கள்” என்றபடி வெளியே அமர்ந்து விட்டார்.

சிவனடியார் உள்ளே சென்றார். நன்கு கொதித்துக் கொண்டிருந்த பஞ்சலோகத் திரவத்தைக் குடித்தார். மறுகணம் அந்த அதிசயம் நிகழ்ந்தது! ஸ்ரீநடராஜர் விக்கிரகமாகவே உறைந்தார் சிவனடியார்.

அவரைக் காணாது உள்ளே வந்த சிற்பி, விக்கிரகத்தைக் கண்டார். அதன் மார்பில் ஒரு மரு; மருவில் ஒரு முடி! ‘என்ன அதிசயம்… சிவனடியார் மார்பில் இருந்தது போன்றே இந்த விக்கிரகத்திலும் மருவும் முடியும் உள்ளனவே… அப்படியானால் வந்தது யார்?’ என்று வியந்தவர், எல்லாம் சிவனருள் என்பதை உணர்ந்தார்.

கண்ணீர் மல்க ஆடல்வல்லானை வணங்கிப் பணிந்தார். இந்தச் சம்பவம், மார்கழி மாத திருவாதிரை திருநாளன்று நிகழ்ந்தது என்பர்.

கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர் கோயில்
கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர் கோயில்

இப்படி மனித அடையாளங்கள் உடலில் துலங்கக் காட்சி தரும் பெருமான் இன்றும் கோனேரிராஜபுரத்தில் காட்சி அருள்கிறார். ருத்ராட்ச பந்தலின் கீழ், சுவாமி தெற்கு நோக்கி அருள, இவரைத் தரிசனம் செய்தபடி நால்வர் பெருமக்கள் காட்சி தருகின்றனர். இத்தல நடராஜப் பெருமானுக்கு வீதியுலா இல்லை. நடராஜப்பெருமானுக்கு உரிய மார்கழித் திருவாதிரை, ஆனித் திருமஞ்சனம் போன்ற நிகழ்வுகள் வெகு விமர்சியாக நடைபெறுகின்றன.

இந்த நடராஜரை வழிபட்டு இந்த ஊரில் இருக்கும் வைத்தியநாதரையும் தரிசனம் செய்தால் நம் பாவங்கள் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.