சிறப்புப் படை, 12 விமானங்கள், ஹெலிகாப்டர்கள்- ஈரானுக்குள் நுழைந்த அமெரிக்கா விமானியை மீட்டது எப்படி?

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஈரான் மீது அமெரிக்க படைகள் F-15E மூலம் குண்டுகளை வீசியது. அப்போது ஈரான் வான் பாதுகாப்பு தடுப்பு ஏவுகணை மூலம் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதில் இருந்த இரண்டு பேரும் விமானத்தில் இருந்து வெளியில் குதித்து உயிரோடு தப்பித்தனர். அதில் ஒருவரை அமெரிக்கப் படை உடனே மீட்டுவிட்டது. மற்றொருவரைக் கடந்த இரண்டு நாள்களாக அமெரிக்கப் படைகள் சிறப்புப் படை மூலம் ஈரான் மலைப்பகுதியில் தேடி வந்தன.

அவரை மீட்க 12 சிறப்பு விமானங்களை அமெரிக்கப் படைகள் அனுப்பி வைத்தன.

ட்ரோன் மூலம் விமானி இருக்கும் இடத்தை அமெரிக்கப் படைகள் கண்டுபிடித்தன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சம்பந்தப்பட்ட பைலட் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த மீட்புப் பணி அமெரிக்க வரலாற்றில் மிகவும் துணிச்சலான ஒன்று என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

பைலட்டை நூற்றுக்கணக்கானோர் ஈரானுக்குள் புகுந்து தேடி கண்டுபிடித்ததாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட பைலட் தற்போது அங்கிருந்து வெளியில் கொண்டு வரப்பட்டுவிட்டார். இரவில் தொடங்கி பகல் முழுவதும் இந்தத் தேடுதல் வேட்டை நடந்தது.

இதில் ஈரான் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தின. ஈரான் படைகள் சம்பவ இடத்தை நெருங்காமல் இருக்க அமெரிக்க விமானங்கள் ஈரான் படைகள் வரும் வழியில் தொடர்ந்து வெடிகுண்டுகளை வீசி அவர்களைத் தடுத்து நிறுத்தியது.

அமெரிக்கப் படைகள், HH-60W ‘Jolly Green II’ மீட்பு ஹெலிகாப்டர்கள், A-10 Warthog தாக்குதல் விமானங்கள், HC-130 வான்வழி எரிபொருள் நிரப்பும் மீட்பு விமானம், பாதுகாப்பான தொலைவிலிருந்து செயல்படும் F-35 மறைவுத் தாக்குதல் விமானங்கள், சிறப்புப் படைகள் மற்றும் ஒரு போர்சார் தேடல் மற்றும் மீட்புச் சிறப்புப் பிரிவு ஆகியவற்றை பயன்படுத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல் குறித்து ஈரான் வெளியிட்டுள்ள செய்தியில், ”பைலட் மீட்பு ஆபரேசனில் 5 பேர் கொல்லப்பட்டனர். இது தவிர ஒரு சி-130 ராணுவ விமானம், இரண்டு ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குவைத் வான் பரப்பில் ஏ-10 விமானம் ஒன்றை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்தின.

ஈரானில் தப்பியது எப்படி?

ஈரானில் இரண்டு நாட்களுக்கு முன்பு F-15E விமானம் விழுந்தவுடன் அதில் இருந்த இரண்டு பைலட்களும் உயிரோடு தப்பினர். ஒருவர் உடனே மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவர் ஈரானில் சிக்கிக்கொண்டார். அவர் அங்கிருந்து எப்படித் தப்பினார் என்பது பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விமானத்தில் இருந்து கீழே குதித்தவுடன் சம்பந்தப்பட்ட பைலட் சம்பவ இடத்தில் இருந்து உடனே வேறு இடத்திற்கு குறிப்பாக மலைப்பகுதிக்குள் சென்றுவிட்டார்.

ஈரான் படைகள் ஒருபுறம் அவரைத் தேடிக்கொண்டிருந்தன. மற்றொரு புறம் அமெரிக்கப் படைகள் சிறப்பு விமானம், ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் தேட ஆரம்பித்தன. சிறப்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் ஈரான் மலைப்பகுதியில் இறங்கி தேடினர்.

மற்றொரு புறம் ஈரான் படைகள் சம்பவ இடத்திற்கு நெருங்குவதைத் தடுக்க அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து வெடிகுண்டுகளைப் போட்டு தடங்களை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது.

மலைகளுக்குள் மறைந்து இருந்த அமெரிக்க பைலட் தான் கீழே விழுந்த உடன் எந்த இடத்தில் இருக்கிறேன் என்ற தகவலை அமெரிக்கப் படைகளுக்குத் தெரிவித்தார். அதனால்தான் அமெரிக்கப் படையால் குறிப்பிட்ட இடத்தில் தேட முடிந்தது. மீட்கப்பட்ட பைலட் உடனே சிகிச்சைக்காக துபாய் கொண்டு செல்லப்பட்டதாக அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.