'இனி மூன்று இல்லை; இரண்டு தான்' – CA தேர்வில் புதிய மாற்றங்கள் என்னென்ன?

இந்தியாவிலேயே மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘பட்டயக் கணக்காளர்’ (CA) தேர்வு. இதில் ஒரு மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், மாணவர்களின் தேர்வுத் தயாரிப்பினை சீரமைக்கவும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

இதன்படி, வரும் மே முதல் சிஏ இறுதித் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள ஜனவரி மாதத் தேர்வு முறை நீக்கப்படுகிறது, இனி மே மற்றும் நவம்பர் மாதங்களில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும்.

ICAI
ICAI

இந்த மாற்றத்திற்கான முதன்மைக் காரணம், மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகளுக்கும், அடுத்தத் தேர்வுகளுக்கும் இடையே போதுமான கால அவகாசத்தை வழங்குவதுதான்.

தற்போதைய மூன்று முறை தேர்வு முறையில், ஒரு தேர்வின் முடிவுகள் வெளியான பிறகு அடுத்தத் தேர்வுக்குத் தயாராவதற்கு மாணவர்களுக்கு மிகக் குறைந்த காலமே கிடைக்கிறது.

இதனால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கவும், மாணவர்கள் பாடங்களை முழுமையாக உள்வாங்கித் தேர்வெழுதவும் இந்த இரண்டு முறை தேர்வுத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படுகிறது.

இது மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தையும், கல்வியின் தரத்தையும் நேர்மறையாகப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு முறைகளில் மட்டுமல்லாமல், மாணவர்களின் செய்முறைப் பயிற்சியிலும் கூடுதல் கவனம் செலுத்த ICAI திட்டமிட்டுள்ளது.

இதன்படி, பட்டயக் கணக்கியல் துறையில் சர்வதேச தரத்திலான நிபுணத்துவத்தைப் பெற, தற்போதுள்ள இரண்டு ஆண்டு ‘ஆர்ட்டிகிள்ஷிப்’ (Articleship) பயிற்சியை மீண்டும் மூன்று ஆண்டுகளாக உயர்த்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Articleship
Articleship

இதன் மூலம் மாணவர்கள் கணக்கியல், தணிக்கை மற்றும் வரிவிதிப்பு ஆகிய துறைகளில் ஆழமான நடைமுறை அறிவைப் பெற வழிவகை செய்யப்படும்.

இந்த மாற்றங்கள், எதிர்காலப் பட்டயக் கணக்காளர்களின் தொழில்முறைத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தச் சீர்திருத்தங்கள் இந்தியப் பட்டயக் கணக்கியல் துறையை உலகளாவிய தரத்திற்கு இணையாகக் கொண்டு செல்லும் எனக் கருதப்படுகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.