திருச்செந்தூர் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது..
காலை 5.20மணிக்கு கோவில் செப்பு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு அபிசேக பொருட்களால் அபிஷேகம், நடைபெற்று அலங்காரமாகி மகா தீபாராதனை நடைபெற்றது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் திருவாவடுதிரை ஆதினம் அருணாச்சல தம்பிரான் சுவாமிகள், தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் அக்தார் கருத்தபாண்டி நாடார்,இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், தாசில்தார் சுவாமிநாதன், கோவில் உதவி ஆணையர் வெங்கடேஷ், கண்காணிப்பாளர்கள் ராஜ்மோகன், சொர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாசித்திருவிழா கொடியேற்றம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருவதால் மாசித்திருவிழாவில் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அரோகரா கோ‌ஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் சாமியை தரிசித்தனர். தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய விழாவான 5-ம் திருநாள் (11-ந் தேதி) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது.
7-ம் திருநாளான (13-ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.30 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
8-ம் திருநாள் அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.
அன்று பகல் 12 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந் தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் (16-ந்தேதி) நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு மேல் விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.
11-ம் திருநாளான (17-ந் தேதி) தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு சுவாமியும் அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.