இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி: தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு

சென்னை :

தங்க நகை அணிவதை ஆடம்பரமாகவும், கவுரவமாகவும் கருதுவதால், அதன் விலை எவ்வளவு ஏறினாலும் மவுசு மட்டும் குறைவது இல்லை. சர்வதேச பங்குச்சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றம்-இறக்கம் காணப்படுகிறது. தற்போது ரஷியா- உக்ரைன் இடையே போர் மூளும் அபாயம் உள்ளதால், பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது திரும்பி உள்ளது. இதனால் பங்குச்சந்தையில் வீழ்ச்சி நிலவுகிறது. இதன் காரணமாக தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தில் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோன்று, சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.43-ம், பவுனுக்கு ரூ.344-ம் விலை அதிகரித்து ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 653-க்கும், பவுன் ரூ.37 ஆயிரத்து 224-க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று பங்குச்சந்தை மார்க்கெட்டுக்கு விடுமுறை என்பதால் தங்கம் விலையில் நேற்று மாற்றம் ஏற்படவில்லை. ஆனால், வரும் நாட்களில் தங்கம் விலை ‘ராக்கெட்’ வேகத்தில் உயரக்கூடும் என்பது வியாபாரிகளின் கணிப்பாக உள்ளது.

இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஜலானியிடம் கேட்டபோது, ‘ரஷியா-உக்ரைன் இடையே போர் மூளும் அபாயத்தால், உலகச்சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஒரு வேளை இரு நாடுகள் இடையே போர் மூண்டால், பங்குச்சந்தை மேலும் வீழ்ச்சி அடையும் சூழல் உள்ளது. எனவே வரும் நாட்களில் தங்கம் விலை உச்சத்தை தொடக்கூடும். விரைவில் ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை கடந்து செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது.’ என்று தெரிவித்தார்.

தங்கம் விலையை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நடுத்தர மக்கள் சிறுக, சிறுக சேமித்து தங்கம் வாங்கும் நிலை உள்ளது. தற்போது தங்கம் மேலும் விலையேறினால், நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனி போன்று ஆகிவிடும். காய்கறி விலை ஏறினாலும், தங்கம் விலை ஏறினாலும் அது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.