நான் பயங்கரவாதி இல்லை, ஒரு மாநில முதல் மந்திரி – சரண்ஜித் சிங் சன்னி ஆவேசம்

லூதியானா:
பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி நேரடியாக பங்கேற்றார்.
ஜலந்தரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 2014-ல்  இளவரசருக்காக (ராகுல் காந்தி) எனது ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டது. நான் பதான்கோட் மற்றும் இமாசல பிரதேசம் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், எனது ஹெலிகாப்டர் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இளவரசர் அமிர்தசரஸில் இருந்ததால் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  ராகுல் காந்தி எம்.பியாக மட்டுமே இருந்தார். எதிர்க்கட்சிகளை பணியாற்ற விடக்கூடாது என்பதை காங்கிரஸ் வழக்கமாக கொண்டுள்ளது என குற்றம் சாட்டிப் பேசினார்.
இதற்கிடையே, சட்டசபைத் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி நேற்று பஞ்சாப் சென்றிருந்த நிலையில், சண்டிகரிலிருந்து ஹோஷியார்பூருக்கு ஹெலிகாப்டரில் செல்லவிருந்த முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னியின் பயணம் தடைபட்டது.
ஜலந்தரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேச மோடி வந்திருந்ததால், பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி சண்டிகரில் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டது. அதனால் ஹெலிகாப்டரில் கிளம்ப முடியாமல் அங்குள்ள ஹெலிபேடில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்த அவர், ஹோஷியார்பூர் செல்ல முடியாமல் வீடு திரும்பினார்.
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தி நிறுவனத்திடம் பேசிய பஞ்சாப் முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னி, நான் ஒரு முதல் மந்திரி  ஹோஷியார்பூர் செல்லவிருந்த நிலையில் என்னைத் தடுத்து நிறுத்த நான் ஒன்றும் பயங்கரவாதி அல்ல. இது சரியான வழிமுறை அல்ல என காட்டமாக தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.