சாமியாரிடம் ரகசிய தகவல்கள் பகிர்ந்த விவகாரம்: தேசிய பங்கு சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை

புதுடெல்லி: இமய மலை சாமியாரிடம் தேசிய பங்குச் சந்தை தொடர்பான ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட வழக்கில், அதன் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று தீவிர விசாரணை நடத்தினர்.

தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவராக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார். அதன்பின், சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் பொறுப்பில் இருந்த போது, தேசிய பங்குச் சந்தையில் நிதி தொடர்பான முடிவுகள், நியமனங்கள் தொடர் பாக பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இமய மலையில் உள்ள சாமியார் ஒருவரின் ஆலோசனையின்படி என்எஸ்இ தொடர்பான முடிவுகளை சித்ரா ராமகிருஷ்ணா எடுத்ததாகவும், அவரிடம் என்எஸ்இ.யின் ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்டு ஆலோசனை கேட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இமய மலையில் உள்ளதாக கூறப்படும் சாமியாரின் கைப்பாவையாக சித்ரா ராமகிருஷ்ணா செயல்பட்டுள்ளார். அவர் சொல்கிறபடி அவர் செயல்பட்டுள்ளார் என்று செபி குற்றம் சாட்டியது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் எப்ஐஆர் பதிவு செய்தனர். ஓபிஜி செக்யூரிட்டீஸ், அதன் நிர்வாக இயக்குநர் சஞ்சய் குப்தா, என்எஸ்இ அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பங்குச் சந்தையின் கம்ப்யூட்டர் சர்வர் களைப் பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.

மும்பையில் உள்ள சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் அதிகாரிகள் பலரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சித்ரா ராமகிருஷ்ணா முன்னாள் சிஓஓ ஆனந்த் சுப்ரமணியன், ரவி நாராயண் ஆகியோர் வெளி நாடு செல்லவும் சிபிஐ தடை விதித்துள்ளது.

– பிடிஐ

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.